3-வது முறையாக வாரணாசியில் களமிறங்கும் நரேந்திர மோடி..! 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக..!

2024 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்பட உள்ள நிலையில், இதற்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை வலுப்படுத்த பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த 29-ம் தேதி டெல்லி கட்சி தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய 5 மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதில், கடந்த 2014ல் குஜராத்தின் வதோதரா, உபியின் வாரணாசியில் போட்டியிட்டு இரு தொகுதியிலும் வென்ற நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார். 2வது முறையாக 2019 தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது 3வது முறையாக வாரணாசியில் களமிறங்குகிறார்.