காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருப்பெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது, பழனிசாமி என்ன கேட்கிறார்? ’நான் மத்திய அரசிடம் விருது வாங்கினேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கியிருக்கிறீர்களா’என்று கேட்கிறார். பழனிசாமி அவர்களே…! உங்களுக்கு அவர்கள் கொடுத்த அவார்டு எதற்கு தெரியுமா? படத்தில் ஒரு டைலாக் வருமே, ’நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்’என்று அதற்கு ஏற்ற மாதிரி, நீங்கள் இருக்கிறீர்கள் என்று பி.ஜே.பி. அரசு உங்களுக்கு விருது கொடுத்திருக்கும்!
நாங்கள் மக்களிடம் விருது வாங்கி இருக்கிறோம் பழனிசாமி அவர்களே… கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெறுகிறோமே! அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய விருது! இன்னொரு விருது காத்திருக்கிறது! ஜூன் 4-ஆம் தேதி ”நாற்பதுக்கு நாப்பது”என்ற விருது.
பழனிசாமி அவர்களே! wait and see! நீங்கள் பாழ்படுத்திய நிர்வாகத்தைச் சரிசெய்து தி.மு.க. அரசு, தமிழ்நாட்டை ‘நம்பர் ஒன்’ மாநிலமாக மாற்றியிருக்கிறோம். தமிழ்நாடு எதில் எல்லாம் நம்பர் ஒன் தெரியுமா? பட்டுக்கும் – நெசவுக்கும் பெயர் போன காஞ்சி மண்ணில் சொல்கிறேன். ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ தோல் பொருட்கள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ ஏற்றுமதி ஆயத்தநிலைக் குறியீட்டில் ’நம்பர் ஒன்!’ எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் ’நம்பர் ஒன்!’ கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில், ’நம்பர் ஒன்!’ மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்பில், ’நம்பர் ஒன்!’ 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், ’நம்பர் ஒன்!’ இப்போது நான் சொன்னது எல்லாம் நாங்கள் எடுத்த புள்ளிவிவரம் இல்லை, ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்!
பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில், 14- வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறோம். மாண்புமிகு அன்பரசன் இருக்கிறார். அவரது துறையில், ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசையில் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாட்டை நம்முடைய ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், LEADER ஆக்கி இப்போது முதலிடத்தையும் பிடித்துவிட்டோம்.
எந்த சமூக – பொருளாதாரக் குறியீட்டை எடுத்துப் பார்த்தாலும், அதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத்தான் இருக்கும்! பழனிசாமி அவர்களே! நீங்கள் எதில் ’நம்பர் ஒன்’ தெரியுமா? பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டு உரிமைகளை பா.ஜ.க.விடம் அடகு வைத்தீர்களே, அதில் மட்டும்தான் ’நம்பர் ஒன்!’ எப்படியெல்லாம் பிரதமர் மோடிக்கு – மத்திய அமைச்சர்களுக்கு – பா.ஜ.க.வுக்கு லாவணி பாடினீர்கள்! ‘மோடிதான் எங்கள் டாடி’என்று சொன்னீர்களே!
அதுமட்டுமல்ல, பா.ஜ.க. இங்கு, இந்தியைத் திணித்தபோது நாம் எதிர்த்தோம். ஆனால், அ.தி.மு.க. அமைச்சர் என்ன சொன்னார்? அண்ணா மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார் என்று பச்சைப்பொய்களைப் பேசவைத்து அழகு பார்த்த பச்சோந்திதான், இந்தப் பழனிசாமி! அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் இயற்கைக் கூட்டணி என்று சொல்லி, செண்டிமெண்ட் மழை பொழிந்தவர்கள்தான் பழனிசாமி நாடக கம்பெனி!
இப்போது பிரிந்தது போன்று நாடகம் போடும் பழனிசாமி, இன்றைக்கு ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஒருவேளை, அ.தி.மு.க சில இடங்களில் வென்று பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா? என்று கேள்வி கேட்டால், அதற்கு ஒப்புக்காகக் கூட “ஆதரிக்க மாட்டோம்”என்று பழனிசாமி பதில் சொல்லவில்லை. “பொறுத்திருந்து பாருங்கள்”என்று வாய்தா வாங்கியிருக்கிறார் பழனிசாமி! இதுதான் அவரின் பா.ஜ.க. எதிர்ப்பு லட்சணம்!
எங்கேயாவது “பா.ஜ.க. எங்கள் கொள்கை எதிரி” என்று பழனிசாமி சொல்லியிருக்கிறாரா? பா.ஜ.க.வை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று ஏன் அவரால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை! ஏன் என்றால், முதுகு வளைந்து பாதம் தாங்கும் பழனிசாமியால் ஒருபோதும் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது என்பதே உண்மை! அ.தி.மு.க.வுக்குப் போடும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான்! பழனிசாமியின் பகல் வேஷங்களும் – பச்சைப்பொய்களும் இனி தமிழ்நாட்டு மக்களிடம் எப்போதும் எடுபடாது! இப்போது, நாட்டு மக்கள் இந்தியாவின் எதிர்காலம் இந்தியா கூட்டணியின் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கையில், இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.