திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில், திமுக துணைப் பொதுச் செயலாளர், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி எழுதிய திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு இளைஞர் அணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். மேலும், பொன்முடி எழுதிய நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்று கொண்டார்.
இத்தனை தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்த நூலில், அன்னைத் தமிழ்நாட்டையும் – அமெரிக்கப் பெருநாட்டையும் ஒப்பிட்டிருக்கிறார் பொன்முடி. அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பெருங்குடி மக்களின் விடியலுக்கும் – விடுதலைக்கும் – மேன்மைக்கும் தோன்றியதுதான் திராவிடர் இயக்கம். இந்தியத் துணைக் கண்டத்தில் நம் மக்கள் எப்படி, பிறப்பின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ, அதேபோன்று அமெரிக்க மண்ணில், கருப்பின மக்கள் நிறத்தால் ஒடுக்கப்பட்டார்கள்.
திராவிட இயக்க வரலாற்றை 1916 முதல் 1949 வரையிலும், கருப்பர் இயக்க வரலாற்றை 1909 முதல் 1941 வரையிலும் எடுத்துக்கொண்டு, இந்த ஆய்வு நூலை எழுதி இருக்கிறார். திமுகவை பொருத்தவரை, சாதியின் பேரால் – சாத்திர சம்பிரதாயங்களின் பேரால் – காலம் காலமாக உருவாக்கி வைத்திருந்த அத்தனை தடைகளையும் உடைக்கும் சட்டங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஒருவர் இருக்கிறார், யார் என்று உங்களுக்கே தெரியும். சட்டமன்றத்தில் திராவிட மாடல் என்று எழுதி கொடுத்தால் பேசமாட்டார்.
இந்தி மாத விழா நடத்த கூடாது-என்று சொன்னால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க. ஏன், திராவிட நல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? இப்படி பாடினால் சிலருக்கு, வாயும் வயிறும் மூளையும் – நெஞ்சும் எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம். ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை – ஒடுக்குமுறையை – பழமைவாத மனோபாவத்தை – 100 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது.
ஆனால், சுயமரியாதைச் சமதர்ம உலகத்தை அமைப்பதற்கான நம்முடைய பயணத்தில், நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு இன்றைக்கு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம் என்பதை மட்டும், என்னால் உறுதியாக சொல்ல முடியும். இப்படிப்பட்ட புத்தகங்கள்தான் கட்சியையும் ஆட்சியையும் காக்கும் கேடயங்கள். இதை உருவாக்கிக் கொடுத்த நம்முடைய பொன்முடியை பாராட்டுகிறேன் என மு.க. ஸ்டாலின் பேசினார்.