காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருப்பெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது, நமது திராவிட மாடல் அரசின் கொள்கை ‘எல்லார்க்கும் எல்லாம்’ – ‘அனைத்து மாவட்டங்களுக்குமான சீரான வளர்ச்சி’. இதனால்தான், நான் ஆட்சிக்கு வந்தவுடன் கூறினேன். “இது தனிப்பட்ட ஸ்டாலினின் ஆட்சி இல்லை, ஓர் இனத்தின் ஆட்சி”என்று பெருமையோடு சொன்னேன்.
ஒவ்வொரு தனிமனிதரின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்த்துப் பார்த்து அவங்களின் தேவைகளை நிறைவேற்றித் தரப் பாடுபடுகிறோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனை திட்டங்கள்! இந்தியாவே பாராட்டுகிறது! இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நமது திட்டங்களைப் பின்தொடர்கிறது! 2021 தேர்தல் அறிக்கையில், கூறிய திட்டங்கள் மட்டுமல்ல; சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியவன்தான் இதோ உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
ஆட்சிக்கு வந்தவுடன் தொழில்வளத்தைப் பெருக்க, தொழில் முனைவோர்களுடன் கூட்டம் நடத்தினேன். அதில் அவர்கள் கேட்டுக்கொண்டது, நம்முடைய இளைஞர்கள் வேலை பெற, திறன்பயிற்சி தேவை என்று சொன்னவுடன், அதற்கான திட்டத்தை உருவாக்க ஆணையிட்டேன். அப்படி உருவாக்கிய திட்டம்தான், ’நான் முதல்வன் திட்டம்!’ அந்த திட்டத்தின் மூலம், இதுவரை 28 இலட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி இருக்கிறோம்.
திட்டத்தைச் செயல்படுத்துவது மட்டுமல்ல, அந்தத் திட்டம் எப்படி சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு, அந்த திறன்பயிற்சி எடுத்த இளைஞர்களின் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினேன். அந்தக் கூட்டத்தில், பேசிய ஒரு மாணவி கூறினார்கள், ”இந்த நான் முதல்வன் திட்டத்தால், எனக்கு எல்லாத் துறைகளைச் சார்ந்தும், படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது! அதனால் முதல் இண்டர்வியூ-இல் ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில், அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது”என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்.
இன்னொரு மாணவர் கூறினார், “இன்றைக்கு நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி, எங்களுக்குப் பயிற்சி வேண்டும்! வசதி இருக்கின்றவர்களால் வெளியே நிறைய பணம் செலவு செய்து கோச்சிங் கிளாஸ் – டிரெயினிங் செண்டர் என்று சென்று படிக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்குவது இந்த நான் முதல்வன் திட்டம் எங்கள் கனவுகளுக்கான வாசல்களைத் திறந்து விடுகிறது”என்று பூரிப்போடு சொன்னார். அதனால்தான், இந்த நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கியபோது, என்னுடைய கனவுத்திட்டம் என்று சொன்னேன். இப்போது நம்முடைய கனவுகளை நனவாக்கும் திட்டமாக மாறி இருக்கிறது! இதைத் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை!
இதே போன்று, இன்னொரு புரட்சிகரத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்! அதற்கும் நான் எதிர்கொண்ட அனுபவம்தான் காரணம்! சென்னையில், ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்ட்டீங்களா”என்று எதார்த்தமாகக் கேட்டேன். அதற்கு அந்தக் குழந்தை ”வீட்டில் அப்பா – அம்மா வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய மாட்டார்கள், அதனால் சாப்பிடவில்லை”என்று சொன்னதும், அதிகாரிகளை அழைத்தேன்.
”பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் கொண்டு வரவேண்டும்! திட்டத்தைத் தயார் செய்யுங்கள்” என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, ”சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அதுவும் இல்லாமல், இது நம்முடைய தேர்தல் அறிக்கையில் கூட சொல்லவில்லை” என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன். “வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்காலத் தலைமுறை குழந்தைகள்தான்! அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட்டு, நல்ல உடல்நலத்தோடு இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும்! இதை நாம் கண்டிப்பாகச் செய்யவேண்டும். நிதிநிலை சரிசெய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் ஃபைலைத் தயார் செய்யுங்கள்”என்று உத்தரவு போட்டேன். இந்த ஸ்டாலின் போட்ட கையெழுத்தால், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள்.
அடுத்த சாதனைத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்! தாய்மார்கள் இன்றைக்கு நமக்கு இவ்வளவு ஆதரவு தரக் காரணமான திட்டம்! தொலைக்காட்சியில் சகோதரி ஒருவர் பேசும் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் அந்தச் சகோதரி சொல்கிறார். ”வீட்டில் அத்தனை வேலையும் செய்வோம். ஆனால், வெளியில் யாராவது எங்களைப் பற்றி வீட்டுக்காரரிடம் கேட்டால், அவர், நான் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்’என்று கூறுவார்! என்னதான் வேலை செய்தாலும், என்னுடைய சேமிப்பில் ஒன்றும் இருக்காது. ஆத்திர அவசரத்திற்கு ஒரு ரூபாய் இருக்காது. வீட்டுக்காரரிடம் கேட்கவும் தோன்றாது! ஆனால், இன்றைக்கு ஸ்டாலின் அண்ணன் தரும் ஆயிரம் ரூபாய், என்னுடைய சுயமரியாதைக்குக் கொடுக்கும் அங்கீகாரம்’என்று கண்ணில் நம்பிக்கையுடன் கூறிய அந்தத் தாய்மார் போன்று, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள், ’எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் தாய்வீட்டுச் சீர்’ மாதம் ஆயிரம் ரூபாய் என்று உரிமையோடு சொல்லும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!
அதுமட்டுமல்ல, நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளில் இருந்து, “மகளிர் சுதந்திரமாக, ஸ்டாலின் அய்யா பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறோம்” என்று சொல்லும், விடியல் பயணத் திட்டம்! அதேபோன்று, ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்குச் சமம்! பெண் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்கு வரும் என்னுடைய 4 இலட்சத்து 81 ஆயிரத்து 75 மகள்களுக்கு ஆயிரம் ரூபாய் தரும், ’புதுமைப் பெண் திட்டம்’!
மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டம்!
வெளியூரில் வேலைக்குப் போகும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ’தோழி விடுதி’ திட்டம்!
ஒரு கோடி பேருக்கும் மேல் பயனடைந்திருக்கும் ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்!
2 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றி அவர்கள் குடும்பங்களையும் காப்பாற்றி இருக்கும் ’இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம்!
இன்னும் சொல்லலாம்! நிறைய இருக்கிறது! அதற்குப்பிறகு, இது சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாறிவிடும்! எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு நன்மை செய்யவது மட்டும்தான், நம்முடைய ஒரே குறிக்கோள்! இப்படி பார்த்துப் பார்த்து, தமிழ்நாட்டை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறோம் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.