திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது, இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம்! பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம்! ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல்! மிக மிக முக்கியமான தேர்தல்! ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்கவேண்டுமா அல்லது R.S.S. எழுதும் சட்டம் இருக்கவேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா – வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார்! இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார்! அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்! என முக ஸ்டாலின் உரையாற்றினார்.