மக்களவையில் அமித் ஷா ஆவேசம்: “மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்”

மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி மீது, இந்த அரசு மீது நம்பிக்கை போய்விடவில்லை. மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் உண்மையான குணம் என்ன என்பதை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அம்பலப்படுத்தும்.

அரசைப் பாதுகாக்க ஊழல் செய்வது என்பதுதான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம். சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் என்றால், அவர் நரேந்திர மோடிதான். மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய புகழ் இருக்கிறது. நாட்டு மக்களுக்காக அவர் ஓய்வின்றி உழைக்கிறார். நாள்தோறும் 17 மணி நேரம் தொடர்ச்சியாக அவர் உழைக்கிறார். ஒருநாள்கூட அவர் விடுப்பு எடுத்துக்கொண்டது கிடையாது. மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை நான் இப்போது கூறுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்ட கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. வெறும் கடனை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக, கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கான அமைப்பு முறையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் விவசாயிகளுக்குக் கொடுத்திருப்பது இலவசங்கள் அல்ல. மாறாக, அவர்கள் தங்களை தற்சார்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கை. நரேந்திர மோடி அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க சில முடிவுகளை எடுத்து, வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் முடிவு கட்டி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம் என்பது அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கொள்கைகளைப் பாதுகாக்க போராடுகிறது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால் அதில் 15 பைசாதான் அவர்களைச் சென்றடைகிறது என பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால், இன்று முழு தொகையும் ஏழைகளைச் சென்றடைகிறது” என்று அமித் ஷா உரையாற்றினார்.