பேசுப் பொருளாக மாறியுள்ள ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ராமதாஸ் திடீர் பதிவு..!

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே என பாமக நிறுவனர் ராமதாஸின் திடீர் பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, திடீரென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக அணிக்கு தாவியது. இதற்கு பாமகவில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அன்புமணியின் நிர்பந்தத்தால் இந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதாக அப்போதே கூறப்பட்டது.

தொடர்ந்து பல எதிர்ப்புகளை மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிட்ட 10 இடங்களிலும் சவுமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். இந்த படுதோல்வி இன்னும் பாமகவினர் மனதில் நீங்காத நிலையில் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பின் பாமகவை பாஜக கண்டு கொள்ளவில்லை என தெரிகின்றது.

இதனிடையே இரு தினங்களுக்கு முன் பாமக தலைவர் அன்புமணி எம்பிக்கு ரயில்வே வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை மத்திய அரசு அளித்தது. மத்தியில் கேபினட் அமைச்சராக பதவி வகித்த அன்புமணிக்கு சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கி அவரை சிறுமைப்படுத்தி விட்டதாக பாமகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளன.

மேலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏதாவது பெரிய பொறுப்பு வரும் என்ற கனவில் இருந்த நிலையில் சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ராமதாஸ்ஸூக்கு ஏற்படுத்தி இயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த திடீர் பதிவு பாஜக தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் வட மாவட்டத்தில் மட்டும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவுக்கு சவாலாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அண்மையில் தவெக மாநாடு அமைந்துள்ளது. மேலும் பாமகவின் கொள்கைகள் சிலவற்றை தவெக பின்பற்றுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று விஜய் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், ராமதாஸின் இந்த பதிவு பேசுப் பொருளாக மாறியுள்ளது.