அன்புமணி ராமதாஸ் வழக்கிற்கு பயந்து மத்திய அரசிடம் மண்டியிடுவது கோழையா? உறவுக்கு கைகொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தோடு மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து நம் மாநில வளர்ச்சியை குறைக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால்விடும் முதலமைச்சர் கோழை என அமைச்சர் பி. கே. சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணம் அருகே வன்னியர் சங்கம் சார்பாக சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நாங்கள் கேட்பது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி நூறு சதவிகித மக்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்குங்கள் என்பதுதான். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. இதனை நடத்த அதிகாரமிருந்தும் உரிமை இல்லை என்று சொல்வது கோழைத்தனம் இல்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அன்புமணி ராமதாஸின் இந்த பேச்சிற்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பி. கே. சேகர்பாபு பேசுகையில், வழக்கிற்கு பயந்து மத்திய அரசிடம் மண்டியிடுவது கோழையா? உறவுக்கு கைகொடுப்போம்.
உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தோடு மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து நம் மாநில வளர்ச்சியை குறைக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால்விடும் முதலமைச்சர் கோழை என்று கூறுபவர்கள் கோழை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஒரு காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதராக சர்தார் வல்லபாய் படேலை போற்றப்பட்டதுண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடிய இரும்பு மனிதராக இன்று முதன்மையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை அன்புமணி ராமதாஸுக்கு சொல்ல விரும்புகிறோம் என பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.