நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் தமிழகத்தில் இருந்து காலியான இரண்டு இடத்தை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.
இந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரை தி.மு.க. தனது வேட்பாளர்களாக நிறுத்தியது.இதனையடுத்து அதற்கான தேர்தல் நடைபெற்றால் ஒருவர் எம்பியாக தேர்வாக 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தற்போது திமுகவிற்கு 159 எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுகவிற்கு 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு என்பதால், மற்ற அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் மாநிலங்களவைகான திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது பாஜக மக்களவை 301, மாநிலங்களவை 94 என்று 395 எம்.பி.க்களுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மக்களவை 52, மாநிலங்களவை 33 என்று 85 எம்.பி.க்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது. ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் மக்களவை 22, மாநிலங்களவை 12 என 34 எம்.பி.க்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், திமுக தற்போது மக்களவை 24, மாநிலங்களவை 10 என 34 எம்.பி.க்களுடன் சமமான இடத்தை பிடித்துள்ளது.