நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திப்பதால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கிய தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் வாங்கும் சத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் பொருளாதார திட்டங்களைப் பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குரலை மத்திய அரசு காது கொடுத்துக் கேட்பதே இல்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் கூட பா.ஜ.கவின் பொருளாதார கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரகலா பிரபாகர் கொடுத்த பேட்டியில் , ” பா.ஜ.கவும் பிரதமர் மோடியும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்றிவிடுவார்கள். இந்தியாவின் வரைபடத்தையே இவர்கள் மாற்றி விடுவார்கள். மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடுமுழுவதும் ஏற்படும். மேலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தலே நடைபெறாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.