நானா படோல்: ராகுல்காந்தியைக் கண்டால் பாஜகவுக்கு பயம்..!

ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என அமித் ஷாவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதிலடி கொடுத்தார்.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ இந்திரா காந்தி உயிரோடு வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு வராது’ என்று பேசினார். இதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று பதிலடி கொடுத்தார்.

நானா படோல் கூறுகையில்,’ காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன? நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடிந்தது. தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ராணுவ வீரர்கள் தினமும் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இந்த நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இந்திராகாந்தி இருந்தவர்.

மறைந்த அவரை 370-வது சட்டப்பிரிவில் அமித் ஷா விமர்சனம் செய்வது தவறானது. இந்திராகாந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக எங்கும் இருந்திருக்காது. இந்திராகாந்தியை விடுங்கள், தற்போது ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என நானா படோல் பேசினார்.