நரேந்திர மோடி: ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அம்ரோஹா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் குடும்ப அரசியல், ஊழல், (சிறுபான்மை மக்களை) தாஜா செய்யும் அரசியல் ஆகியவற்றை மேற்கொள்பவை. அதேநேரத்தில், இந்துக்களின் மத நம்பிக்கைகள் மீது தாக்குதல் தொடுக்கக் கூடியவர்கள் இவர்கள்.

இந்து மதத்துக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் எந்த வாய்ப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. (ராகுல், அகிலேஷ் எனும்) இரு இளவரசர்கள் படத்தை மக்கள் ஏற்கெனவே புறக்கணித்துவிட்டார்கள். எனினும், மீண்டும் அவர்கள் இங்கே நடிக்க வந்திருக்கிறார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரான பிரதிஷ்டைக்கான அழைப்பை நிராகரித்தன. இவர்கள் ராமர் கோயில் மற்றும் சனாதன நம்பிக்கையை தினமும் தவறாக பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் ராம நவமி அன்று குழந்தை ராமர் மீது பிரம்மாண்ட சூரிய திலகம் செய்யப்பட்டது. இன்று. நாடு முழுவதும் ராமர் பக்தி நிரம்பி வழியும்போது, சமாஜ்வாதி கட்சியினர், ராமர் பக்தர்களை பாசாங்குக்காரர்கள் என்று பகிரங்கமாக அழைக்கின்றனர்” என நரேந்திர மோடி தெரிவித்தார்.