மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 3 மாதங்களாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில் அங்கே 125 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இம்மோதல்களில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி வருகிறது. அதாவது குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு மைத்தேயி இன கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ உலகின் மனசாட்சியை உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.
மணிப்பூரில் நிகழ்ந்து வரும் இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குக்கிராமங்களிலும் மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் திமுக மகளிரணி வெளியிட்ட அறிக்கையில், “பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது.
இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. இதனைக் கண்டித்து 24.07.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணியினர், மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். கறுப்பு உடைகளை அணிந்து வந்த ஆயிரக்கணக்கான திமுக மகளிர் அணியினர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.