தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி: ஸ்டாலினுக்கு ஷா வால் தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது..என்று ஞாபகம் இருக்கா..?”

1976ல் கே.கே.ஷாவால் தான் இவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஏதோ ஒரு ஷாவால் தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஞாபகம் இருக்கா..? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசினார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகவும் பதற்றமாக இருக்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “ஏன் இவ்வளவு பதற்றம் முதல்வரே? இன்னும் 11 மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகப் போகிறார். 2026க்கு முன்பு நமது நாட்டை நக்சலிசத்தின் கொடுமையிலிருந்து விடுவிப்பதாக அமித் ஷா சபதம் செய்துள்ளார்.

அரசியல் சாணக்கியர் அமித் ஷாவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் மோடியும் திராவிட வம்சத்தின் தவறான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். தோல்வி பயத்தில் பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் வருத்தப்படுவார்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார். அமித் ஷாவின் தமிழகம் வருகை முதலமைச்சரை பதற்றமடைய செய்துள்ளது.

திமுகவை வீட்டிற்கு அனுப்பவே அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. ஊழலுக்கு ஒரு முறை தேச விரோதத்திற்கு ஒரு முறை கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. மத்தியில் நீங்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு அடிபணிந்து தானே இருந்தீர்கள். அமித் ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. தமிழ்நாட்டை ஆளமுடியாது எந்த ஷா வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். நான் நினைவுபடுத்துகிறேன். 1976ல் கே.கே.ஷாவால் தான் இவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த ஷாவால் அல்ல, ஏதோ ஒரு ஷாவால் தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது” என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.