விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டை அறிவித்து அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். அதன் பிறகு அவர் கூறும்போது எங்கள் கூட்டணியில் விரிசல் இல்லை. மதுவிலக்கு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என்றார்.
மாறி மாறி பேசும் இந்த முரண்பட்ட கருத்துக்கள் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப் போகிறேன். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா? அரசே வருமானம் என்ற பெயரில் மதுக்கடைகளை நடத்துகிறது. ஆளும் கட்சியினரே 40 சதவீத மது ஆலைகளையும் நடத்துகிறார்கள். தேசிய அளவில் மதுவிலக்கு வந்தால் எப்படி ஏற்பீர்கள்.
மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி திமுக என்றாவது பேசியதுண்டா? இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்பிக்கள் இருக்கிறார்கள். தேசிய மதுவிலக்கு பற்றி பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லையே ஏன்?
அப்பட்டமான உங்கள் அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. திமுக கூட்டணியில் அஸ்திவாரத்தில் குழி பறித்து அசைத்து பார்க்க நினைத்தீர்கள். அது பலிக்கவில்லை என்றதும் எல்லாவற்றையும் மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறீர்கள். இதையே தான் நீட் விவகாரத்தில் செய்தீர்கள்.
புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகிறீர்கள். இப்போது மது விலக்கையும் உங்களாலோ உங்கள் கூட்டணியாலோ கொண்டு வரமுடியாது என்றதும் மடை மாற்றுகிறீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.