சேகர்பாபு பேச்சு: ஊசிப் போன பண்டம் பாஜக..! திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள்..!

ஊசிப் போன பண்டம் பாஜக அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருச்சியில் தமிழக பாஜக சார்பில் மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் MLA, வானதி சீனிவாசன் MLA உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026 -ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் இருக்கிறார்கள். வட இந்தியர்கள் யாரும் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசியதில்லை.

ஆனால் திமுகவினர் வடமாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களையும் இழிவாக பேசுகிறார்கள். இதற்கு அவர்களது பயம்தான் காரணம். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியைப் பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து பேசுகிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?” என ஆவேசமாகப் அண்ணாமலை பேசியிருந்தார்.

சென்னையில் இன்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 73 நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இன்றைக்கு 33-வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கி வருகிறோம். இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்பதை உறுதி அளிக்கிறோம்.

குற்றப்பின்னணியில் இருக்கும் அமைச்சர்கள் என அண்ணாமலை சொல்வது, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார். படிக்காதவர்கள் எப்படி பள்ளியை பற்றி பேசலாம் என்கிறார் அண்ணாமலை.. ஒருவேளை காமராஜரை களங்கப்படுத்துகிறாரா அண்ணாமலை? அண்ணாமலை ஒரு தற்குறி படிப்பு, மனம், சேவைக்கு தொடர்பு இல்லை. மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செயல்படுவார்கள். இது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது. என்னை சரித்திரப் பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என நான் கூட சொல்கிறேன். ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை. ஆதாரத்தை காட்டிதான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.

போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும்? ஆதாரத்தைக் காட்ட சொல்லுங்கள். ஊசிப் போன பண்டம் பாஜக அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். ஊசிப் போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026-ல் மக்கள் தூக்கி எறியவும் தயாராக இருக்கின்றனர்.

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். நீதிபதிகளையே தலைக்கு மேலே இருப்பதற்கு ஒப்பானவர்கள் என பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல. எங்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராக் இருப்பதுதான் திமுக. இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது இந்தியாவின் வரைபடத்தில் கீழே இருக்கிற தமிழ்நாட்டை, வரைபடத்தில் மேலே இருக்கிற அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். லோக்சபா தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றி அலற்விட்டுள்ளோம். 2026 தேர்தலிலும் 200 தொகுதிகள் என்பது நிச்சயம்; 234 தொகுதிகளில் வெற்றி என்பது லட்சியம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.