திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள். அதை மறந்து விடக்கூடாது. நாற்பதும் நமதே நாடும் நமதே என நான் முழங்குகிறேன் என்றால் அவை எல்லாம் நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கை தான். இன்றிலிருந்து கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
வெற்றி மட்டுமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது தான் உங்களுடைய முக்கியமான முதல் கடமை. நம்முடைய சாதனைகளை தொடர்ந்து நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வர வைப்பது உங்களுடைய முக்கிய கடமை. உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும்.
அதற்கு முதலில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரை பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரி படிவம் உங்கள் கையில் வழங்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக அச்சிடப்பட்டு சீக்கிரமே உங்கள் கையில் வந்து சேரும். வாக்காளரின் பெயர்; அவருடைய வயது; அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யார் யார்; என்னென்ன படித்திருக்கிறார்கள்; என்ன தொழில் செய்கிறார்கள்; எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும்.
உங்கள் வாக்குச்சாவடியில் 200 குடும்பங்கள் இருந்தால் அந்த குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு நிர்வாகிகள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பூத் கமிட்டி முகவர்கள் என்னிடம் புகார் செய்யலாம். நான் நடவடிக்கை எடுப்பேன்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. வரவும் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் ஒதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என்று பிரதமர் கூறினாரே மீட்டாரா? அப்படி மீட்கப்பட்ட கருப்பு பணத்தை இந்திய மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்றாரே.. தந்தாரா? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று மோடி சொன்னாரே ஏற்படுத்தி தந்தாரா? படிக்கும் பட்டதாரிகளாக இருக்கும் நம் இளைஞர்களை பக்கோடா விற்க மோடி சொல்கிறார்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆளுக்கு ரூ.1000 மாதந்தோறும் நாம் கொடுக்கிறோம். அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி கொள்ளையடிக்கும் கொள்ளைக்கார ஆட்சியாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. தாய்மார்களின் இந்த கோபம் எல்லாம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கத்தான் போகிறது.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.