முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எல். முருகன், “குடும்ப அரசியல் நடத்தும் கட்சி திமுக என்பது மீண்டும் நிரூபனமாகி இருக்கிறது. திமுகவில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அவருக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவார். அவருக்குப் பின் உதயநிதியின் மகன் முதலமைச்சராவார்.
குடும்ப அரசியல், வாரிசு அரசியல் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மு.க.ஸ்டாலினின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர் அவர். திமுகவில் இருக்கும் பல்வேறு மூத்த தலைவர்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஆனால், நமது பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை கட்டமைக்க அரசியல் பின்னணி இல்லாத குடும்பங்ளைச் சேர்ந்த 10 லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தொலைநோக்கு சிந்தனை உள்ள தலைவர் ஒருவரின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும், குடும்ப, வாரிசு அரசியல் செய்பவர்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.” என எல்.முருகன் தெரிவித்தார்.