தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரியநிதி வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
மேலும் எல்.முருகன் தொடர்ந்து பேசுகையில், புதிய கல்விக் கொள்கை மூலம், ஆரம்பக் கல்வியை தாய் மொழியான தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தற்போதைய காலகட்டத்தில், புதியதொழில் நுட்பத்துக்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரிய நிதி வழங்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார்.