தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும். யார், யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் என்ற பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும் என இரா.முத்தரசன் தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு இரா.முத்தரசன் பதிலளித்தார்.
அப்போது, பாஜக ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லை. அதை பாதுகாக்க வேண்டும் என்று தான் இன்று உறுதிமொழி ஏற்கிறோம். இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தான் கடைபிடித்துள்ளோம். மற்றொரு முறை ஆயுதம் ஏந்திய முறை இருக்கிறது. அதை நாம் கடைபிடிக்கவில்லை.
இந்நிலையில் பாராளுமன்ற ஜனநாயக முறையை சிதைக்கும் வகையில் தான் பாஜக அரசு செயல்படுகிறது. மகாராஷ்டிரா தேர்தலில் இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது எந்த ஜனநாயக முறை? வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதுவும் தற்போது பறிக்கப்படுகிறது. இது பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே தான் இதை பாதுகாக்க வேண்டும்.
அதானி விவகாரத்தில் பாஜக விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும். யார், யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் என்ற பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை என இரா.முத்தரசன் தெரிவித்தார்.