ஆளூர் ஷாநவாஸ் சரமாரியான விமர்சனம்: விஜய் பாஜக எதிர்ப்பில் எலி..! திமுக எதிர்ப்பில் புலி..!!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக பாசிசம் என்றால் திமுக என்ன பாயாசமா? என்று பேசி இருந்த நிலையில், பாசிசம் என்றால் என்ன என்றே விஜய் புரியாமல் பேசுகிறார் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தெரித்துள்ளார்.

“நான் முன்பே விஜய் திமுக எதிர்ப்பு என்ற ஒன்றை கையில் எடுத்துவிட்டால், அது அதிமுகவுக்குப் பிரச்சினையாகவே போய் நிற்கும் என்று சொல்லி இருந்தேன். இப்போது அதேநிலைப்பாட்டிற்குத்தான் விஜய் வந்து நிற்கிறார். பலரும் அப்போது என்னை விமர்சித்தார்கள். விஜய் கட்சி தொடங்கினால் அதிமுகவுக்கு எப்படி பாதிப்பு வரும் என்றார்கள். ஞாயிற்றுக் கிழமை மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தெளிவாக திமுக எதிர்ப்பைப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறது.

இனிமேல் விஜய் திமுகவை விமர்சித்தே போராட்டங்களை நடத்துவார். இதை யார் செய்ய வேண்டும்? அதிமுக செய்யவேண்டும். அதை இப்போது விஜய் கையில் எடுத்திருக்கிறார். திமுகவின் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அதிமுக, பாஜக, நாதக ஆகிய கட்சிகளின் அரசியல். எனவே, விஜய் வருகை இந்தக் கட்சிகளுக்குத்தான் பின்னடைவைத் தரும். கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை. அதிமுக அலுவலகத்தில் தினம் எடப்பாடி பிரஸ் மீட் நடத்தி இருந்தால், கமலாலயம் பக்கம் ஊடகங்கள் போய் இருக்காது.

எடப்பாடி தவறவிட்ட இடத்தைத்தான் அண்ணாமலை பிடித்துக் கொண்டார். இதைப் புரிந்துகொண்டுதான் விஜய் தெளிவான முடிவுடன் வந்துள்ளார். திமுக சாடிய அவர், அதிமுகவை மறைமுகமாகக் கூட விமர்சிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசி, அந்தத் தொண்டர்களை ஈர்க்கப்பார்க்கிறார். ஜெயலலிதா பற்றி விஜய் ஒரு வார்த்தை பேசவில்லை. ஊழலைப் பற்றிப் பேசுகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஊழலால் தண்டனைப் பெற்றவர்கள் உள்ள கட்சி அதிமுக. அதை ஏன் விமர்சிக்கவில்லை? திமுக குடும்பத்திலிருந்து யாரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை. யாரும் ஜெயில்லுக்குப் போகவில்லை.

2ஜி வழக்கில் கூட வாதாடி வெளியே வந்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஊழல் என்று சொல் நேரடியாக திமுக பக்கம் போகிறார். திமுகவை விமர்சிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அது விமர்சிக்கக் கூடாத கட்சியும் அல்ல. ஆனால், திமுகவைப் பாசிச சித்தாந்தம் உள்ள பாஜகவுடன் ஒப்பிட்டுப் பேசுவதே தவறான புரிதல். பாஜகவைக் காட்டி பூச்சாண்டி காட்டுவதாகச் சொல்கிறார்.

இங்கே சிறுபான்மையினரை வைத்து அரசியல் செய்வது யார்? குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு எதிரானது? காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கத்தின் பின்னணி என்ன? முத்தலாக் தடைச் சட்டம் யாருக்காகக் கொண்டுவரப்பட்டது? ராமர் கோயில் கட்டப்பட்ட இடத்தில் முன்பு என்ன இருந்தது? ஹிஜாப் எதிர்த்து சட்டம் போடுவது எதற்காக? வக்ஃபு திருத்தச் சட்டம் யாரைப் பாதிக்கும் ? இடஒதுக்கீடு முஸ்லிம் மக்களுக்கு மாநில அரசு கொண்டு வந்தால் மத்திய அரசு அதைத் தடுக்கிறது? தேர்தலில் சீட்டே கிடையாது பாஜக என்கிறது.

அமைச்சரவையில் முஸ்லிம்களையே சேர்க்க மறுக்கிறார்கள்? முஸ்லிம்களிடம் ஓட்டே கேட்க மாட்டேன் என பாஜகவினர் பரப்புரை செய்தார்கள்? இதைத்தான் பாசிசம் என சொல்கிறோம். இப்படி எங்கேயாவது ஒரு தரப்புக்கு எதிராக, மக்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறதா? திமுகவை எதிர்க்கிறார்? ஆனால், திமுக கொள்கைகளை விஜய் ஏற்றுக் கொள்கிறார். இது ஏன்? பாஜகவை எதிர்த்தால் தமிழ்நாட்டில் விஜய்யின் வண்டி ஓடும். அதே மாதிரி திமுக கொள்கையை ஏற்றால்தான் வண்டி ஓடும். அதைத்தான் விஜய் செய்கிறார். ஆகவே, மதவாத அரசியல் செய்பவர்கள் கொள்கை எதிரி என்கிறார். திமுக அரசியல் எதிரி என்கிறார். பாஜகவை எலி போல் எதிர்க்கிறார், திமுகவுக்குப் புலியாக எதிர்க்கிறார் விஜய் என ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்.