அண்ணாமலை: ‘வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்ற பிரதமர் திமுககாரர் அல்ல’

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சி பாசறையில் வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் ஒப்பித்துவிட்டு போயிருக்கிறார்.

கடந்த 1964-ம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரை சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவாக ஒப்புக்கொள்கிறார். 1964-க்கு பிறகு பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகன், பேரன், மகளுக்கு மத்திய அமைச்சர் பதவியும், எம்.பி. பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்து பேசவோ, செயல்படவோ நேரம் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புபுயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்துவிட கூடாது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் நரேந்திர மோடிதான். மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவியை கேட்டுப் பெறத் தெரிந்த திமுகவுக்கு, 1964-ல்புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

மத்திய அரசில் மீனவர்களுக்காக தனித்துறை அமைத்து, பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். காசிபோல ராமேசுவரமும் விரை வில் உலகப் புகழை பெறும். வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற, பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் திமுககாரர் அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.