ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியிருப்பதற்கு தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்றுள்ளார். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதிலளித்தார்.
அப்போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் நான் முதல் முறையாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் விஜயகாந்துடன் வந்துள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க நான் வந்துள்ளேன்.விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட போது ஒவ்வொரு ஊரிலும் முத்துராமலிங்க தேவரை வணங்கிவிட்டுதான் பிரசாரம் செய்தேன். இன்று அவரது பிறந்த நாள், இறந்த நாளில் தரிசிக்க வந்தது நிறைவாக இருக்கிறது.
தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், நீண்டநாள் போராட்டத்துக்கு பின் விஜய் மாநாடு நடத்தி உள்ளார். அதற்கு என் வாழ்த்துகள். அதிகாரத்தில் உள்ள கட்சியானது அனைவருக்கும் சரி சமமாக பகிர்ந்து தர வேண்டும். அதிகாரப் பகிர்வை அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன. நாங்களும் அதைப் பற்றி பேசுகிறோம். தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடைபெறும் போது எங்களுடைய நினைவுகளை சுட்டிக்காட்டுவதும் வழக்கம்.
அதுபோலதான் விஜய் மாநாட்டின் போது தேமுதிகவின் முதல் மாநாடு தொடர்பான வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டது. நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்தவன். அண்ணன் விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் ஒரு மாநாட்டைத்தான் நடத்தி முடித்துள்ளார் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.