மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு வேதனை அளிக்கிறது என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி எம்பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றனர்’’ என ஆதர்ஷ் அய்யர் குற்றம் சாட்டினார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்புநீதிமன்றம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூருவில் உள்ள திகர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி எம்பி சுப்ரியா சுலே, மகாராஷ்டிராவின் புனே நகரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகச் சிறந்த பெண். மிகவும் துணிச்சலுடன் செயல்படக் கூடியவர், மிகவும் நேர்மையானவர்.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது, அதிர்ச்சி அளிக்கிறது. இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக்கூடாது என்று வேண்டுகிறேன். வரும் நவம்பரில் நாடாளுமன்றம் கூடும்போது, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கேள்வி எழுப்புவோம் என சுப்ரியா சுலே தெரிவித்தார்.