நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பில்பித் தொகுதியின் எம்பியாக இருப்பவர் வருண் காந்தி. 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும் 1996-ல் இருந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதியின் எம்பியாக வருண் காந்தி அல்லது அவரது தாயார் மேனாகா காந்தி இருந்துள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்பியாக இருக்கும் மேனகா காந்திக்கு அந்த தொகுதியை பாஜக மீண்டும் வழங்கி இருக்கிறது. அதேநேரத்தில், பில்பித் தொகுதி வருண் காந்திக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வருண் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “கணக்கில் அடங்காத உணர்வுபூர்வமான நினைவுகளோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். மூன்று வயது சிறுவனாக இருந்தபோது எனது தாயின் விரல்களைப் பிடித்துக்கொண்டு முதல்முறையாக பில்பித் வந்ததை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது, இந்த தொகுதிக்காக நான் பணியாற்றுவேன் என்றோ, இந்த தொகுதி மக்கள் எனது குடும்பமாக மாறுவார்கள் என்றோ நான் நினைக்கவில்லை.
பில்பித் தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகவே எம்பி பதவியை கருதினேன். எளிமை, இரக்கம் என மதிப்புமிக்க பல பாடங்களை இந்த தொகுதியில் இருந்தே நான் கற்றேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அளவில் மட்டுமல்லாது, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை பில்பித் ஏற்படுத்தியது .
பில்பித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி முடிவுக்கு வரலாம். ஆனால், தொகுதி மக்களுடனான எனது உறவு இறுதி மூச்சு இருக்கும் வரை முடிவுக்கு வராது. எம்.பி.யாக இல்லாவிட்டாலும், உங்கள் மகனாக வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக சேவை செய்வேன். உங்களுக்காக எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
எளிய மக்களின் குரலை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். அந்தப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள உங்கள் ஆசியை வேண்டுகிறேன். பில்பித் தொகுதி மக்களின் அன்பும் நம்பிக்கையும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நான் உங்களோடு இருந்தேன்; இருக்கிறேன்; எப்போதும் இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.