புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமார் தனது பேரப் பிள்ளைகளுக்கு காது குத்து விழா வைத்து மொய் விருந்தளித்தார். இந்த பிரம்மாண்டமான மொய் விருந்து மூலம் சுமார் 11 கோடி ரூபாய் வசூல் ஆனதாக அப்பகுதியில் பேசுபொருளாக இருப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. நடத்திய மொய் விருந்தில் 11 கோடி ரூபாய் வசூல் ஆனது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், காதுகுத்தபட்டதா திமுக எம்எல்ஏ பேரப்பிள்ளைகளுக்கும், வருமானவரித்துறையினருக்கும் என்ற தலைப்பில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.மேலும், மொய் விருந்து என்பது கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி என்றும் விமர்சித்திருந்தார்.
பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமார் நடத்திய மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என திமுகவினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நடக்கும் மொய் விருந்தை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,”பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ரொம்ப நாளாக இருக்கும் மொய் விருந்து நிகழ்ச்சியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார். அவர் சொல்வது தவறு, வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத் தூக்கிவிடுவது கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அவருக்கு எதுவும் தெரியாது” என கூறியுள்ளார்.