டிடிவி தினகரன்: திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை..!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அமமுக எட்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் அறிவார்ந்த கொள்கைகளையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனிதாபிமானக் கோட்பாடுகளையும் கலங்கரை விளக்கமாகப் பின்பற்றி, தமிழகத்தின் புகழை தரணி எங்கும் பரப்பி தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களை இத்தருணத்தில் வணங்குகிறேன்.

தனிப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவத்தை கழகக் கொடியில் ஏந்தியும், இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை மனதில் நிலைநிறுத்தியும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடவும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடவும், நாம் அனைவரும் இணைந்து கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 -ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் உருவாக்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்களின் அளவில்லா அன்போடும் ஏகோபித்த ஆதரவோடும் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அம்மா அவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றிடும் வகையில் தொடங்கப்பட்ட நம் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அன்புச் சகோதரர்களான மேலூர் திரு.R.சாமி, செயல் வீரர் திரு.P. வெற்றிவேல் உள்ளிட்ட பலர் நம்மை விட்டு இயற்கையோடு இயற்கையாக கலந்திருந்தாலும், விசுவாசத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவர்களின் எண்ணம் ஈடேறும் நேரமும், காலமும் அருகில் வந்துவிட்டது.

மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்ட இயக்கங்களால் மட்டுமே வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டிய நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருக்கும் இயக்கமாக நம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திகழ்ந்து வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொகுதியான ஆர்.கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்ட கட்சி மற்றும் ஆளுங்கட்சியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்று அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் நாம் தான் என்பதை அன்றே நிரூபித்துக் காட்டினோம். அதன் தொடர்ச்சியாக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து விதமான தேர்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றதோடு உள்ளாட்சி தேர்தல்களில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வாகை சூடி, முக்கிய பொறுப்புகளையும் வென்றுகாட்டினோம்.

நாம் பெற்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வெறும் வாக்குகள் அல்ல, நம் இயக்கத்திற்கு தமிழக மக்கள் வழங்கிய நற்சான்றுகள். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு, இரும்புப் பெண்மணியாக செயல்பட்டு, தமிழக மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை தந்த புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களைக் கொண்டதுதான் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

நமது இயக்கம் என்பது மக்களுக்கு தொண்டாற்றும் பெருங்கடமையை முன்னேடுத்துச்செல்லும் ஒரு பொது வாழ்கை பயணம் என்ற எண்ணத்தோடு களப்பணியாற்றும் உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கிவரும் அன்பை என்றென்றும் உறித்தாக்குகிறேன். மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நீங்கள் அளிக்கும் அன்பு, ஆதரவு, ஊக்கம் மற்றும் உறுதுணை என்ற இந்த பாசப் பிணைப்பை எவராலும், எக்காலத்திலும் பிரிக்க முடியாது என்ற நம்பிக்கை, மிகுந்த உத்வேகத்தையும் அளிக்கிறது.

இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பின் ஆட்சி பீடத்தில் நம்மால் அமரவைக்கப்பட்டவர்கள், நம் புரட்சித்தலைவி அவர்கள் தன் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் கட்டிக் காத்த இயக்கத்தை தங்கள் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் மூடுவிழா காணும் முயற்சியில் மும்முரமாகவும், முழுமூச்சாகவும் இறங்கியுள்ளனர். எந்த தீயசக்தியை வீழ்த்த புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் போராடினார்களோ அதே தீய சக்திகளுடன் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு, நம் தலைவர்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இயக்கத்தை பாதை மாற்றி அழைத்து சென்றுகொண்டிருக்கும் துரோகக் கும்பலை இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தேர்தலுக்கு முன் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில் அதனை நிறைவேற்ற மறுக்கிறது. பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் இளம் பெண்கள், பெண் காவலர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவுகிறது.

நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கும் நிலையில், குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திமுகவின் மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பை திசைதிருப்பும் வகையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்பதாக கூறிவிட்டு பின்னர் எதிர்ப்பதும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் என திமுக அரசு நடத்தும் கபட நாடகத்தை நம்புவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

சவால்களை எதிர்கொள்வதற்கு உரிய துணிச்சலும், மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அத்தகைய துணிச்சல் மற்றும் மன உறுதியோடும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடி வரும் நாம், நமது களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்திடுவோம். மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமையையும் பாதுகாக்கத் தவறிய மக்கள் விரோத திமுக அரசை அடியோடு துடைத்தெறிந்திடும் நோக்கத்தில், திமுக அரசின் அவலங்களை ஒவ்வொரு வாக்காளரிடமும் முன் நிறுத்தி, மக்களை திரட்டி போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திடுவோம்.

அதே நேரத்தில் மக்கள் விரோத திமுக அரசை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய காலமும் நேரமும் நெருங்கிவிட்டது. நாம் அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து பணியாற்றி மக்கள் விரோத திமுகவை வீழ்த்திடுவோம், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம்!” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தமிழர் திருநாளில் C A தேர்வு..! தேதியை மாற்ற டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

பொங்கல் பண்டிகையின் போது C A தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர். எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக மாநாட்டை சாடிய டிடிவி தினகரன்

மதுரையில் நாளை அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு குறித்து டிடிவி தினகரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்கவுள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது.

“தம்பி பெரும் பணம் செலவழித்து, தோரணங்களும் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது. திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான் . அனைவரும் கண்டு மெய்சிலிர்த்து வியந்தனர்.

ஆனால் தம்பி, அந்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது. அதே போன்று தான் தம்பி பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது, அவை அனைத்தும் பயனற்றது”. “சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை”. என்று பதிவிட்டுள்ளார்.