பயிர்க்கடன்களில் முறைகேடுகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகள் அதனை திரும்ப செலுத்தியும் உரிய ரசீது வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனால் விவசாயிகள் மேலும் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயிர்க்கடன் விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், விவசாயிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண கோரியும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த முறைகேடு தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடனை உடனடியாக திரும்ப வழங்ககோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மற்றும் அவருடைய உதவியாளர் மீது மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க கோரியும் கடந்த 14-ந் தேதி முதல் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் முறைகேடு தொடர்பாக குடிமங்கலம் காவல் நிலையத்தில் விருகல்பட்டிபுதூரைச் சேர்ந்த விவசாயி லோகசிகாமணி என்பவர் அளித்த புகாரின் பேரில், கூட்டுறவு சங்க செயலாளர் கீதா மற்றும் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று குடிமங்கலம் காவல்துறை போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவிகள், சீருடைகள் வழங்குவதில் முறைகேடா…!?

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா புகார் மனுகொடுத்தார். அதில், தலித் விடுதலை இயக்கம் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலமாக தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் காங்கயம் நகராட்சியில் 140 நபர்கள் தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிவதற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் 80 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் தற்போது பணிபுரியும் 80 பணியாளர்களின் வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்பந்ததாரர் சார்பில் பெற்று கொண்டு அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கி வருகின்றனர். இந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் மருத்துவ உதவிகள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்காமல் முறைகேடு செய்துள்ளனர். எனவே காங்கயம் நகராட்சி ஆணையர் இப்பிரச்னையில் தலையிட்டு காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் விஷயத்தில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டுபிடித்து அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தாலுகா அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட தங்கமாள் ஓடை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். இந்த ஓடையை ஒட்டியவாறு கட்டியிருந்த வீடுகளை கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி நிர்வாகம் அகற்றியது.

அப்போது அவர்களுக்கு புக்குளம் பகுதியில் கட்டப்படும் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மாற்று இடத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் இது நாள் வரை அதிகாரிகள் உறுதி அளித்தபடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பொதுமக்கள் உடுமலைப்பேட்டை தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.

திருப்பூர், அன்னூர் உள்ளாட்சி இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்ட, அன்னூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாவட்ட குழு உறுப்பினராக போட்டியிடும் தளபதியார் அவர்களின் ஆசிபெற்ற வேட்பாளர் இ. ஆனந்தன் அவர்களுக்கு நேற்று 04.10.2021 திங்கட்கிழமை மாலை பொழுதில் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 9வது வார்டுக்கு உட்பட்ட மசாண்டிபாளையம், பாலாஜி நகர் பகுதிகளில் திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் MLA அவர்கள் வாக்கு சேகரித்தார்.

இதில் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் TKT.மு.நாகராசன், திருப்பூர் வடக்கு மாநகர கழக பொறுப்பாளர் ந.தினேஷ்குமார், பகுதி கழக பொறுப்பாளர்கள் 15.வேலம்பாளையம், கோ. இராமதாஸ், அன்னாகாலனி செல்வம், வாலிபாளையம் மு.க.உசேன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் து.கோபிநாத், திருப்பூர் மத்திய மாவட்ட மற்றும் மாநகர கழக நிர்வாகிகள் தம்பி.குமாரசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர் அணியை சார்ந்த மாவட்ட துனை அமைப்பாளர் சக்திவேல், திருப்பூர் வடக்கு மாநகர துனை அமைப்பாளர் சூர்யபிரகாஷ், தெற்கு மாநகர வர்த்தகர் அணி துனை அமைப்பாளர் பார்த்திபன்,நல்லூர் பகுதி கழக மாணவரணி துனை அமைப்பாளர் மணிகண்டன், மாணவர் அணியை சார்ந்த தோழர்கள் பிரேம்நாத், பிரவீன், தினேஷ்குமார், 9வது வார்டு உறுப்பினர் சரவண மூர்த்தி மற்றும் மசாண்டிபாளையம் மகளிர் அணியை சார்ந்த சரசுவதி அம்மா உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

வாடகைக்கு வீடு பார்க்க சென்ற இடத்தில் விபரீதம்: இளம்பெண்ணை காதலித்து கரம்பிடித்த கணவர் கழுத்து நெரித்து கொலை..!

திருப்பூர் மாவட்டம் ,மங்கலத்தை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகள் வைஷ்ணவி (20) திருப்பூர் செட்டிபாளையத்தில் சேர்ந்த ஐயப்பன் மகன் அருண்குமார்(22) கடந்த ஓராண்டுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வைஷ்ணவியை அருண்குமார் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னர் இவர்களது வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதால் இவர்கள் அடிக்கடி சண்டையிடுவதும் பின் சேர்வதும் என இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கணவருடன் கோபித்து கொண்டு தாயின் வீட்டிற்கு சென்று வைஷ்ணவியை நேற்று 03/10/2021 மாலை சுமார் 6 மணி அளவில் சமாதானம் செய்து இருவரும் சேர்ந்து வாழலாம் எனக்கூறி அண்ணா நகரில் உள்ள தாய்தமிழ் பள்ளிக்கு பின்புறம் வீடு வாடகைக்கு பார்த்து வரலாம் என கூறி வைஷ்ணவியை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்களுக்கிடையே தகராறு வர வாடகைக்கு பார்க்கச் சென்று வீட்டில் வைத்தே வைஷ்ணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அருண்குமார் தப்பி ஓடிவிட்டார் . தகவல் அறிந்த திருமுருகன் பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றினர். தப்பி ஓடிய அருண்குமாரை காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் வழங்கினார்

திருப்பூர் மத்திய மாவட்டம், தெற்கு மாநகரம்..35 -வது வட்ட கழகத்தில் உள்ள கணேசன் பத்மாவதி திருமண மண்டபத்தில் நல்லூர் பகுதி நேற்று திமுக இளைஞர் அணி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் வழங்கினார்.

உடன் தெற்கு மாநகர செயலாளர் டிகே.டி.நாகராஜ், வடக்கு மாநகர செயலாளர் ந. தினேஷ்குமார், பகுதி கழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி, வட்ட கழக செயலாளர் ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உடுமலை நாராயண கவியின் 112 -வது பிறந்தநாள் இன்று… செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள பூளவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் தம்பதியினருக்கு நாராயணசாமி மகனாகப் பிறந்தார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் நாராயணசாமியின் பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.

அதனை தொடர்ந்து 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்து நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டார். ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார்.

தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82-வது வயதில் மறைந்தார். பின்னர் இவர் புகழை போற்றும் வகையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து கொடுத்தது. மேலும் கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று அவரது பிறந்த நாள் விழாவில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னாள் MLA ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக அரசு சார்பில் நாராயணகவி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தாராபுரம் பகுதியில் இரவு நேரங்களில் கிராவல் மண் திருட்டு… நடவடிக்கை எடுக்க கோரும் பொதுமக்கள்…

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாட்சியருக்கு பஞ்சப்பட்டி கிராமத்தில் அதிகளவு மண் திருடப்பட்டு கனரக வாகனம், லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லப்படுவதாக புகார் வந்தது. தகவலின்படி தாராபுரம் பஞ்சப்பட்டி யில் மறைவான இடத்தில் இருந்து அவ்வழியாகச் சென்ற ஒரு டிப்பர் வாகனத்தில் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் பஞ்சப்பட்டி இலிருந்து தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் வரை துரத்திச் சென்று டிப்பர் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முயன்றபோது வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடினார். இது தொடர்பாக விசாரித்த பொழுது அதே பகுதியில் தொடர்ந்து ஆறு மாதங்களாக இரவு நேரங்களில் கிராவல் மண் கடத்தி விற்று வந்தது தெரியவந்தது.

விவசாய பிரச்சினைகளுக்கு தனி துறை அமைக்க உழவர் உழைப்பாளர் கட்சி வேண்டுகோள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் தமிழக அரசு விவசாயத்திற்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து இருப்பது விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.


இதனை உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் வரவேற்கின்றோம். தற்போது விவசாயிகள் வாய்க்காலில் பிரச்சினை என்றால் ஒரு துறையிலும், குளத்திற்கு பிரச்சினை என்றால் வேறு துறையிலும், என பல்வேறு துறைகளுக்கு சென்று தீர்வு கண்டு வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக விவசாய பிரச்சினைகளுக்கு தனி துறை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.