தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் ஜானகிபுரத்தில் அமைந்துள்ள 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும் மேலும் அரசு டாஸ்மாக் குடோனில் இருந்து கணக்கு காட்டாமல் கூடுதலாக மதுபான வகைகளை வாங்கி வந்து தனியார் குடோன்களில் பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் எழுந்த புகாரின்பேரில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நேற்று முன்தினம் அந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் கணக்கில் வராத ரூ.31,680 மற்றும் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 180 மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை பறிமுதல் செய்து, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் விலைக்கு மது விற்றதாக மேற்பார்வையாளர்கள் உள்பட 3 பேருக்கு பணியிட மாற்றம்

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகளில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமிருந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் குன்னூர், கூடலூர் உள்பட பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது குன்னூரில் உள்ள டாஸ்மாக்கடை ஒன்றில் ஒரே வாடிக்கையாளரிடம் பலமுறை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், காந்தி, விற்பனையாளர் ஆறுமுகம் ஆகிய 3 பேர் அப்பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்த பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு மதுபானக் கழகத்துக்கு சொந்தமான குடோனில் பணி அமர்த்தப்பட்டனர்.