அர்ச்சனா பட்நாயக் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பு..!

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹூ சமீபத்தில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளத்துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில், தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து, ஒடிசாவை சேர்ந்த 2002-ஆம் ஆண்டு தமிழக பிரிவு IAS-சான அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பற்றுக் கொண்டார். எனவே தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்: தமிழ்நாடு, கேரளா ஒருபோதும் மதவாத சக்திகளுக்கு இடம் அளித்தது இல்லை…!

தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் இந்திய ஊடகத்துறையின் மூத்த செய்தித்துறை நிறுவனமான மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சி யில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் திராவிட அரசியல் முன்னெடுப்புகள் என்பது மொழி உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் மையப்படுத்தியது. தமிழ்நாட்டின் ஆழமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான வரலாறு, அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது.

மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு. 1924-ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அதே போல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் புது அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் முன்னணி இடத்தை தமிழ்நாடும், கேரளமும் பெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் வெற்றிகரமான முறையில், பாசிச – வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தமிழ் இலக்கிய பெருமை என்பது பக்தி, புராணம் சார்ந்ததாக தான் இருந்தது. ஆனால், எங்கள் தலைவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் முன்னெடுப்புகளால், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை சார்ந்த தமிழ் இலக்கியங்களின் புகழ் மேலோங்க தொடங்கின.

தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், தமிழ் மொழியை அடிப்படை அடையாளமாக வைத்து செயல்படத் தொடங்கியதற்கு, தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல், பெருமை மிகுந்த தனித்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்துள்ளதே காரணம். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையாகவும் உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்தி எனும் மொழியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. முற்போக்கு மற்றும் அறிவியல் கருத்துகளை திராவிட இலக்கியம் வளர்த்தது. மூட நம்பிக்கைகளை களைவதற்கான பணிகளை திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது. சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்.

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக சமஸ்கிருதம் இருந்தது; சம உரிமையை மறுத்தது. முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜக அரசின் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்துக்கு ரூ.31,962 கோடி ஆனால் தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி என்ன கணக்கு தெரியல..!

மத்தியில் ஆளும் பாஜக அரசு வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கான வரி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை நேற்று விடுவித்து. இதில் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்துக்கு அதிக தொகையும், தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரி பகிர்வு குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தொகையும் தவணையும் அடங்கும். வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுப்படுத்தவும், மாநிலங்களின் வளர்ச்சி, நிதி திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்ற வகையில் இந்த வரி பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.31,962 கோடியும் அதையடுத்து பீகாருக்கு ரூ.17,921 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13,404 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.11,255 கோடி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.10,737 கோடி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தென்மாநிலங்களான தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி, ஆந்திரபிரதேசத்துக்கு ரூ.7,211 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.6,498 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,745 கோடி மற்றும் கேரளாவுக்கு ரூ.3,430 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு தயக்கத்துடன் சென்றேன்..! இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன்..!!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சய் கிஷன் கவுல் வருகிற டிசம்பர் 25-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை என்பதால் நேற்று அவரது கடைசி பணி நாளாக அமைந்தது. இதை முன்னிட்டு உச்ச நீதிமன்ற பார் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசுகையில், நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மேலும் அவை எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டுவதற்கு வழக்குதாரர்களுக்கு திறந்திருக்க வேண்டும். வழக்காடுபவர்கள் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறார்கள். கடைசி முயற்சியாக இருக்கும் இந்த உச்ச நீதிமன்றத்தை அவர்கள் அடையும் நேரத்தில் அது திறந்து இருக்க வேண்டும்.

நீதி கிடைப்பது எல்லா நேரங்களிலும் தடையின்றி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் பெருமையாகும். தங்கள் தகராறுகளைத் தீர்ப்பதற்காக இந்த நீதிமன்றத்தை அணுகிய வழக்குரைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நீதி வழங்கும்போது நம் மனதில் முதன்மையாக இருக்க வேண்டும்.

ஒரு வழக்குரைஞர் தனது வழக்கின் முடிவை அறிய காலவரையின்றி காத்திருக்க வைக்கக்கூடாது என நான் நம்புகிறேன். நீதிபதியாக பெரும்பாலும் சரியான முடிவு கண்டுபிடிக்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சிறந்த முடிவு மட்டுமே உள்ளது. ஒரு முடிவெடுப்பதற்கு உங்களுக்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒருமுறை நீங்கள் முடிவு செய்தால், திரும்பிப் பார்க்காதீர்கள். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட செய்தியை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நான் பணியாற்றிய காலம் எனது நீதித்துறை வாழ்க்கையின் மிகவும் நிறைவான காலமாக அமைந்தது,. தமிழ்நாட்டு மக்களின் பொதுவான மனப்பான்மை மிகுந்த பணிவு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. நான் தயக்கத்துடன் சென்னைக்குச் சென்றேன். ஆனால் இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன். அங்கு நான் மிகவும் நீடித்த நட்பைக் கண்டேன். அதை இன்றும் நான் தொடர்ந்து போற்றி வருகிறேன். இவ்வாறு சஞ்சய் கிஷன் கவுல் உருக்கமாக பேசினார்.

ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவும்? அறிகுறிகள் என்னென்ன?

கொரோனா வைரஸின் 2ம் அலை பாதிப்பு தணிந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தமிழ் நாடு – கேரள எல்லையான செறுவாரக்கோணத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஜூன் 7ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், ஜூன் 28ம் தேதி அவருக்கு ஜிகா வைரசுக்கான அறிகுறிகள் தென்பட்டன. மொத்தம் 1 9 பேருக்கு அறிகுறிகள் ஏற்பட்டதால், அவர்களது சளி, ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண் உட்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவுகிறது. அதிகாலை, பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இந்த கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் என்றும், இந்த கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சலை பரப்பும் தன்மை கொண்டவை எனவும், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், கருவும் பாதிக்கப்படும் என்றும், இதனால் கருச்சிதைவு மற்றும் குறை பிரசவம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும் என தெரிவிக்கும் மருத்துவர்கள், 2 முதல் 7வது நாளில் அறிகுறிகள் தென்படும் எனவும் கூறியுள்ளனர்.

ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல்,தலைவலி, தோலில் நமைச்சல், மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய்க்கென பிரத்யேக சிகிச்சை, தடுப்பூசிகள் இல்லை என தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.