தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025-க்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அதனை விமர்சித்தனர். இந்நிலையில், ராக்கெட் மேலே கிளம்பும்போது, கீழே புகையும் நெருப்பும் வருவதைப் பார்க்கலாம் எனவும், அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும் என அமைச்சர் T. R. B. ராஜா விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசு வெளியிட்ட விண்வெளி தொழில் கொள்கை தமிழ்நாடு முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் பயன் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இது அவரின் குடும்ப கொள்கை. குடும்பத்தினர் பயனடைவதற்காக தொழில் கொள்கை வெளியிடப்பட்டது அவமானமானது என விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், T. R. B. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் திராவிட மாடல் தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விண்வெளித் தொழில் கொள்கை 2025. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கானத் திட்டமிடல்களும் தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்புடன் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் IIT Madras startup ஆன Agnikul உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய தமிழ்நாட்டு நிறுவனங்களுடன் இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் அடுத்த பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கும் மகத்தான முயற்சிக்கான launch padஆக விண்வெளித் தொழில் கொள்கை 2025 அமைந்துள்ளது.
ஆனால் தமிழ் நாட்டின் நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்கட்சிகள் திரு. நம்பி நாராயணன் அவர்கள் ஆலோசகராக இருக்கும் ஒரு நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல். எந்தவித முதலீடும் செய்யாத அந்த நிறுவனத்திற்கும் இந்த கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் அவர் செய்த சாதனைகளுக்கு இந்த வீனர்கள் கொடுக்கும் பரிசா இது. கீழ்த்தரமாக தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது செற்றை அள்ளி வீசும் அற்பர்கள் தங்களது கேவலமான அரசியல் போக்கை நிறுத்துவது நல்லது.
அதே போல நம்மை பார்த்து copy அடித்து குஜராத் மாநிலம் ஒரு கொள்கையை வெளியிட்டு உள்ளது. அப்போது அது அடிமைகளின் முதலாளிகளின் நண்பர்களுக்காகவா ? தமிழ்நாடு அவர்களை விட சிறப்பான ஒரு கொள்கையை தயார் செய்து விட்டதே என்ற வயிற்றெரிச்சல் காரணமாகவா? தமிழ்நாட்டில் எந்தவொரு நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இந்த விண்வெளித் தொழில் கொள்கையை விமர்சித்து கொச்சைப்படுத்துவதாக நினைத்து ஐ.ஐ.டி. வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனங்களின் இளந்தமிழர்கள், வேலை வாய்ப்பு பெறவிருக்கும் மகளிர்-இளையோர் ஆகியோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.
தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் கட்சியினரும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்ட கட்சியினரும் திட்டமிட்டு பரப்ப நினைக்கும் பொய்களை முறியடித்து, விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும். ராக்கெட் மேலே கிளம்பும்போது, கீழே புகையும் நெருப்பும் வருவதைப் பார்க்கலாம். அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என T. R. B. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.