டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி மர்லினா சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி MLA -க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA -க்களளுடன் மூன்று நாள் டெல்லி சட்டமன்றக் கூட்டம் நேற்று தொடங்கியது. பாஜக மற்றும் எதிர்க்கட்சி MLA -க்கள் சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமையில் சட்டமன்றத்தில் பதவியேற்றனர்.
2-வது நாளான இன்று, முந்தைய ஆம் ஆமி கட்சி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கைகளை பாஜக அரசு தாக்கல் செய்வதற்கு முன்பாக, டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றும் ஆம் ஆத்மி MLA -க்கள்சட்டசபையில் போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அதிஷி மர்லினா சிங், முன்னாள் டெல்லி அமைச்சர் கோபால் ராய் உள்ளிட்ட 11 MLA -க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டசபை தலைவர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை மீது பாஜக உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி மர்லினா சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டமேதை அம்பேத்கரை விட நரேந்திர மோடி பெரிய தலைவரா என்று கேள்வி எழுப்பினார். டெல்லியில் பாஜக பதவிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு மோடி படத்தை வைத்துள்ளனர். அம்பேத்கரை புகழ்ந்து முழக்கமிட்ட ஆம் ஆத்மி MLA -க்களை பேரவையில் இருந்து வெளியேற்றிவிட்டனர். அம்பேத்கர் மீதான பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பையே டெல்லி அரசின் செயல் காட்டுவதாக அதிஷி மர்லினா சிங் தெரிவித்தார்.