“சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர்களே கொடுத்துக் கொள்ள கூடாது என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்புசந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் கூட்டத்தில் பேசிய சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம், ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அரசியலில் நான் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சேர்ந்ததால் பயந்துவிட்டார்கள்” என பேசியிருந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், சிவானந்தா காலனி டாடா பாத் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தன்னை அரசியல் சூப்பர் ஸ்டார் என பேசிய சீமானின் கருத்துக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வானதி சீனிவாசன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும்.
அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தான். அவருக்கு உலக நாடுகள் எல்லாம் மிகச்சிறந்த தலைவர் என பட்டமளித்துக் கொண்டிருக்கிறது. காவி என்பது பாஜகவுக்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது இந்த நாட்டின் பாரம்பரியம். அதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.