எடப்பாடி பழனிச்சாமியா..? ஸ்டாலினா..? என்பதுதான் 2026 தேர்தல் களத்தில் போட்டி என SP வேலுமணி தெரிவித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை சார்பாக நடைபெறும் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் SP வேலுமணி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய SP .வேலுமணி, “2026ல் தமிழ்நாடு முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்கப் போகிறார். அவரது பிறந்த நாளை நாம் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதிமுக நிறுவனரும் கழகத்தில் வெற்றியை மட்டுமே பார்த்த தலைவரான MGR பிறந்த நாளை நாம் சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறோம். அதன் பிறகும் கட்சியை வளர்த்து, நம்மை எல்லாம் வளர்த்தெடுத்தவர் ஜெயலலிதா. சாதாரணமாக விவசாயக் குடும்பத்தில் இருந்த நம்மை அமைச்சராக்கியது ஜெயலலிதா தான்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, முதலில் MLA, வாரிய தலைவர், அமைச்சர் என படிப்படியாக முன்னேறியவர். தனது உழைப்பாலும் ஜெயலலிதா மீது இருந்த விஸ்வாசத்தாலும் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். அதிமுக பொது செயலாளராக இருப்பவர் எடப்பாடி. 4 ஆண்டுகள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.
அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்பதே நமது முக்கிய இலக்கு. எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அவர் கூட அதெல்லாம் வேண்டாம் என்றே சொன்னார். ஆனால், 2026 தேர்தலில் அவரை வைத்துத் தான், எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லியே வாக்குகளைப் பெறப் போகிறோம். எனவே, அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டியது நமது கடமை.
அடுத்த பிறந்த நாள் கொண்டாடும்போது சட்டசபைத் தேர்தல் முடிந்திருக்கும். அவர் முதல்வராகத் தேர்வாகி இருப்பார். ஓராண்டில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் முதல்வராகி இருப்பார். எனவே, நமது தலைவரை நாம் தான் கொண்டாட வேண்டும். அவரை வைத்துத் தான் வாக்குகளைப் பெறப் போகிறோம்.. எடப்பாடி பழனிசாமியா..? ஸ்டாலினா..? என்பதுதான் 2026 தேர்தல் களத்தில் போட்டியாக இருக்கும். அப்போது தான் மக்கள் தெளிவாக வாக்களிப்பார்கள்” என SP வேலுமணி தெரிவித்தார்.