Share market fraud: ஷேர் மார்க்கெட் என்ற பெயரில் முதியவரிடம் ரூ.13.26 கோடி மோசடி..!

ஆன்லைன் டிரேடிங், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம், சம்பாதிக்கலாம், இரட்டிப்பு லாபம் பெறலாம். வட்டிக்கு வட்டியும் கிடைக்கும், குறைந்த காலத்தில் முதலீடும் இரட்டிப்பு ஆகும் என்று ஆசைவார்த்தை கூறி சமூக வலைதளங்களைத் திறந்தாலே பங்கு வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களும், போஸ்டுகளுமே கண்ணில் படும்.

சமீபகாலமாக நாளுக்கு நாள் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயனர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களது வாட்ஸ் அப் எண்ணுக்கு முதலீடு தொடர்பான ஆலோசனைகளை அளிக்கிறோம் என்று தொடர்ச்சியாக குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளை மேற்கொள்கின்றனர்.

இதன் மூலமாக சிக்குபவர்களிடம் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத் ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஒரு முதியவரிடமிருந்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தி ஒரு கும்பல் ரூ.13.26 கோடி மோசடி செய்தது. இந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வாட்ஸ் ஆப் மூலம் ஆன்லைன் ஸ்டாக் புரோக்கிங் அறிவுரைகளை கேட்டு வந்தார். இவரும் அடிக்கடி பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்தார்.

இதனை கவனித்த மோசடி கும்பல், ஏஎஃப்எஸ்எல், அப் ஸ்டாக்ஸ், இண்டர்நேஷனல் புரேக்கர்ஸ் போன்ற கம்பனி பெயர்களில் முதியோருக்கு லிங்க் அனுப்பி அவரை வாட்ஸ் ஆப் க்ரூப்பில் இணைத்தனர். இதில், முதியவருக்கு எவ்வித சந்தேகம் வராமல் பிரபல நிறுவனங்களின் பங்கு சந்தை நிலவரங்கள் குறித்து அடிக்கடி தெரியப்படுத்தினர். ஆனால், இவை போலி இணைய தளத்தின் லிங்க் என்பதை முதியவர் அறியவில்லை.

இந்நிலையில், அந்தந்த கம்பனிகளின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு, மோசடி பேர்வழிகள், முதியவரை தொடர்பு கொண்டனர். அந்த நிறுவனங்களில் முதியவரும் ஆர்வம் காட்டியதோடு, ரூ.13.26 கோடி வரை முதலீடும் செய்தார். ஆனால், சில நாட்களிலேயே அந்த மோசடி கும்பல் இவரை தொடர்பு கொள்ள வில்லை. இதனால், முதியவர் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார். இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோவில் கடந்த 2-ஆம் தேதி புகார் அளித்தார்.

அதன் பேரில், ஹைதராபாத் மெட்ரோவில் பணிபுரியும் ஹிமியாத் நகரை சேர்ந்த அதீர் பாஷா, அராபாத் காலித் முஹியுத்தீன், சார்மினார் ஃபதே தர்வாஜாவை சேர்ந்த சையது காஜா ஹஷீமுத்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.5.26 கோடி நூதன மோசடி..!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த தேவராஜன். கிழங்கு மில் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் உலிபுரம் சேர்ந்த தம்மம்பட்டியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் சாந்தகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷேர் மார்க்கெட் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தேவராஜனிடம் சாந்தகுமார் கூறி வந்தார். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நான் பொறுப்பு என ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய அவர், 2021-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை பல தவணைகளில் ரூ.65 லட்சத்து 78ஆயிரத்து 499 ரூபாயை சாந்தகுமாரிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஷேர் மார்க்கெட் தொழில் தொடர்பாக மும்பைக்கு பயிற்சிக்காக செல்வதாக கூறி ரூ.1 லட்சத்தை தேவராஜனிடம் வாங்கி சென்றார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. அதிர்ச்சியடைந்த தேவராஜன், சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். தொடர் விசாரணையில் 15 பேரிடம் சாந்தகுமார், 5 கோடியே 26 லட்சத்து 70ஆயிரத்து 899 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளமுருகன் மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி, நேற்று சாந்தகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.