மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிவசேனா எம்எல்ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இடஒதுக்கீடு குறித்து ராகுல்காந்தி பேசியிருந்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் கருத்துக்கு சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ராகுலின் அமெரிக்க பயணத்தின்போது அவர் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசினார்.
இது காங்கிரஸ் கட்சியின் உண்மை முகம் மற்றும் இடஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் அவரது மனநிலையை காட்டுகின்றது. ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுப்பவருக்கு நான் ரூ.11லட்சம் சன்மானமாக வழங்குவேன்” என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சியில் பாஜகவும் இடம்பெற்றுள்ளது. ஆனால் சிவசேனா எம்எல்ஏவின் கருத்துக்களை ஆதரிக்கவில்லை என்று மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார். சிவசேனா எம்எல்ஏவின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.