கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். அதன்பின்னர், எல்.முருகன் நெசவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது எல்.முருகன் பேசுகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம். கைத்தறி பாதுகாப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து தெரிவித்துள்ளீர்கள். இது தொடர்பாக ஜவுளித் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்.
மித்ரா என கூறப்படும் மெகா 7 ஜவுளி பூங்காவை மோடி கொடுத்துள்ளார். அதில் ஒன்றை விருதுநகர் மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் இங்கிருந்து ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இப்பகுதியின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் பொருளாதார மும் உயரும்.
கைத்தறியில் 70 சதவீத மானியத்தில் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஜவுளி தொழில் அந்நிய செலவாணியை ஈட்டித்தருகிறது. 2047-ல் நாம் உலகத்துக்கு வழிகாட்டும் நாடாக இருக்கவேண்டும் என மோடி குறிப்பிட்டுள்ளார். அதற்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படு வோம் என எல்.முருகன் தெரிவித்தார்.