திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 445 கிராமங்களில் உள்ள அரசு கட்டிடங்களில் 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது.
அரசு கட்டிடங்களின் மேற்கூரைகளில் விழும் மழைநீரை தேக்கி வைத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 600 இடங்களில் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த 600 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளையும் 21 நாட்களில் அமைத்து உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.