கஸ்தூரி கேள்வி: 300 வருஷம் முன்னாடி வந்த தெலுங்கர்கள் தமிழர்கள் என சொல்லும்போது..! எப்பவோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை..!

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.

பிராமணர்கள் சமூகம் மீதான அவதூறு பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க கோரியும் பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று பிராமணர்கள் சமூகம் மற்றும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று இழிவுபடுத்தி பேசுதல், பூணூல் அறுத்தல் உள்ளிட்டவைகளைத் தடுக்க தலித்துகளுக்கு பாதுகாப்பு தரக் கூடிய பிசிஆர் சட்டம் போல ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று பிராமணர் சமூகத்தினர் மற்றும் பல்வேறு ஜாதி, மதத் தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்ம், பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், நடிகை கஸ்தூரி, பாஜக மதுவந்தி, வேலூர் இப்ராஹிம், காங்கிரஸ் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்? என கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி கேள்வி: ராணுவத்தினருக்கான சலுகைகள் அக்னி வீரர்களுக்கு கிடைக்காதது ஏன்..!?

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கி குண்டு வெடித்ததில் கோஹில் விஷ்வராஜ் சிங், சைபத் ஷீத் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில், பீரங்கி பயிற்சியில் குண்டு வெடித்து இறந்த 2 வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

இந்த சம்பவம் அக்னி வீரர் திட்டம் பற்றிய கேள்விகளை மீண்டும் எழுப்புகிறது. ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், இதர சலுகைகள் ஆகியவை அக்னி வீரர்களுக்கு குறித்த நேரத்தில் கிடைக்குமா? அக்னி வீரர்கள் திட்டத்தில் சேர்ந்த வீரர்களுக்கு பென்சன் மற்றும் சலுகைகள் கிடைப்பது இல்லை ஏன்? இரண்டு வீரர்களுக்கும் பொறுப்புகள், தியாகம் ஆகியவை ஒன்று தான்.

ஆனால் வீர மரணத்துக்கு பின் ஏன் இந்த பாகுபாடு? ஒரு ராணுவ வீரரின் உயிர் இன்னொரு ராணுவ வீரரின் உயிரை விட ஏன் மதிப்புமிக்கது என்று பிரதமர் மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பதில் சொல்ல வேண்டும். இதற்கு எதிராக போராடுவேன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மம்தா பானர்ஜி கேள்வி: ரயிலில் பயணிக்கவே மக்கள் பயப்படுகிறார்கள்…! ரயில்வே அமைச்சர் எங்கே..?

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரயிலில் பயணிக்கவே மக்கள் பயப்படுகிறார்கள். ரயில்வே அமைச்சர் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்

நாடு முழுவதும் ரயில்கள் பல இடங்களில் தடம் புரண்டு வருகின்றன. சமீபகாலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதுபற்றி முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில்,’ ரயில்வேயில் என்ன நடக்கிறது? இன்றும் ரயில் தடம் புரண்டதாக செய்தி வருகிறது.

ரயில் தண்டவாளத்தில் உலக சாதனை படைத்துள்ளது. ஆனால் யாரும் எதுவும் கூறவில்லையா? மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. ரயிலில் பயணிக்கவே மக்கள் பயப்படுகிறார்கள். ரயில்வே அமைச்சர் எங்கே? தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்பது மட்டும் பலன் அளிக்காது. ஆபத்து ஏற்படும் போது மக்கள் பக்கம் இருக்க வேண்டும்’ என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.