40 கோடி இந்தியர்கள் தேசப் பற்றை கடமையாக கருதும் வரை நாட்டை உலுக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என பியூஷ் கோயல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய பியூஷ் கோயல், “140 கோடி இந்தியர்கள் தேசப் பற்றை உயரிய கடமையாக கருதும் வரை, பஹல்காம் தாக்குதல் போன்ற நாட்டை உலுக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்” என்று தெரிவித்தார். இந்த மத்திய அமைச்சர் மக்கள் மீது பழியை போட்டு பேசியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.