டெல்லியில் விவசாய அமைப்புகள் போராட்டம் 300 நாள் நிறைவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றனர். இந்த விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் விவசாய அமைப்புகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்றுடன் 300 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியாக நடத்தி வரும் அறப்போர் 300 நாள்களைக் கடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெளிவாகத் தெரிந்தாலும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுகின்றனர், எனவே எங்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

அமரீந்தர் சிங்: சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சி தாவினார்.தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து. வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன்.

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள் அனுபவமற்றவர்கள் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.