நீங்கள் கொலைகாரர்கள். மதரஸாக்கள் மற்றும் மசூதிகளுக்கு மட்டுமே நீங்கள் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டும்.என கூறி 7 மாத இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர்.
இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பின் வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில்,மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இஸ்லாமியர் என்பதால் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கஸ்தூரி தாஸ் நினைவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான டாக்டர் சி.கே. சர்க்கார், “உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் என் மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்கிறார்கள், நீங்கள் கொலைகாரர்கள். உங்கள் கணவர் இந்துக்களால் கொல்லப்பட வேண்டும்,
அப்போதுதான் இந்துக்கள் அனுபவித்த வலியை நீங்கள் உணர முடியும். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாறக் கற்பிக்கப்படும் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளுக்கு மட்டுமே நீங்கள் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டும்.திரும்பி வராதே, நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்” என்று கூறி, அவர் 7 மாதமாக சிகிச்சை அளித்து வந்த முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
“இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், மனம் உடைந்துள்ளோம். கடந்த ஏழு மாதங்களாக டாக்டர் சர்க்காரின் பராமரிப்பில் இருக்கும் எனது கர்ப்பிணி மைத்துனிக்கு நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமே அவருக்கு சிகிச்சையளிக்க அவர் வெளிப்படையாக மறுத்ததைக் கண்டு திகைப்பு ஏற்பட்டது.
அப்போதிருந்து அவள் அழுது கொண்டிருக்கிறாள். துயரத்திலும் பயத்திலும் இருக்கிறாள். தனக்காக மட்டுமல்ல, அவளுக்குள் வளரும் உயிருக்காகவும். அவளுக்கு ஆதரவு, இரக்கம் மற்றும் கவனிப்பு தேவைப்படும் நேரத்தில், அவள் வெளிப்படையான தப்பெண்ணத்தையும் கொடுமையையும் சந்தித்தாள்” என்று அந்தப் பெண்ணின் உறவினரான வழக்கறிஞர் மெஹ்ஃபுசா கதுன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.