காவல் ஆணையர் அருண் தகவல்: சென்னையில் உளவுத்துறை தீவிர கண்காணிப்பு ..!

சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய , “சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களான மால்கள், திரையரங்குகள், கோவில்கள் மற்றும் கடற்கரை ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த கேள்விக்கு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ்: ‘ஆபரேஷன் சிந்தூர்’.. முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்போம்..!

ஜம்மு- காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்போம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22- ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது இந்திய ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய கப்பல் படை அதிகாரி உள்ளிட்ட 27-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்ட நிலையில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதை அடுத்து ராணுவம், காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஒருவேளை போர் ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த போர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட தயாராக இருந்தன.

இதற்கிடையே, திடீரென நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. சிந்தூர் என்றால் தாலி கட்டிய பின் பெண்கள் நெற்றியில் இடும் திலகம் என்று அர்த்தம். பஹல்காம் தாக்குதலில் பல இளம் பெண்கள் தங்கள் துணையை இழந்த நிலையில் அதற்கு பதிலடியாகவே இந்தியாவின் ஆபரேஷனுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக காஷ்மீர் தாக்குதலை தொடர்புடைய ஜெய்ஸ் – இ – முகமது தலைமையகம் உள்ளிட்ட முக்கிய தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ,” நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்! காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.