சைபர் கிரைம்: தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் 91,161 பேரிடம் ரூ.1,116 கோடி மோசடி..!

ஆன்லைன் மூலம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 91,161 பேரிடம் ரூ.1,116 கோடியை சைபர் குற்றவாளிகள் மோசடி செய்துள்ளனர். மாநில சைபர் கிரைம் முயற்சியால் மோசடி நபர்களிடம் இருந்து ரூ.526 கோடி முடக்கக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சைபர் கிரைம் மூலம் இணைய நிதி மோசடிகள், கிரிப்டோகரன்சி மோசடிகள் என ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரையிலான 9 மாதங்களில் 91 ஆயிரத்து 161 பேரிடம் சிபிஐயில் இருந்து பேசுவதாகவும், கிரிப்டோகரன்சி என பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மூலம் 1,116 கோடியை சைபர் குற்றவாளிகள் பறித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில சைபர் கிரைம் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள ரூ.526 கோடி முடக்கக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடி நபர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 9 மாதங்களில் ரூ.48 கோடி திரும்ப பெற்று தரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆன்லைன் மோசடி நபர்களிடம் ஏமாறக் கூடாது. பொதுவாக ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது.

எனவே நீங்கள் கைது செய்யப்பட இருப்பதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம். பணம் செலுத்த வேண்டாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தெரியாத குழுக்களில் சேர வேண்டாம். அப்படி யாரேனும் மோசடி செய்தால் உடனே சைபர் ஹெல்ப் லைன் எண் 1930 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநில சைபர் கிரைம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் மோசடி..!

பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பழைய நாணயங்கள் வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சகணக்கில் சம்பாதிக்கலாம் என மூட்டை தூக்கும் தொழிலாளி ராஜன் என்பவரின் செல்போனுக்கு தொடர்ந்து விளம்பரம் வந்துள்ளது.

தொழிலாளி ராஜன் விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி பேசியுள்ளார். இந்திரா காந்தி உருவம் பொறித்த நாணயத்தின் படத்தை தனக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்ப ராஜனிடம் கூறியுள்ளனர். நாணயங்களின் படத்தை அனுப்பிய பிறகு 2 பெண்கள் தொடர்பு கொண்டு ரூ.36 லட்சத்திற்கு விற்கலாம் என கூறியுள்ளனர்.

அரசின் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் வியாபாரம் என்பதால் பதிவுக் கட்டணம் செலுத்த கூறியுள்ளனர். பெண்கள் கூறியதை நம்பி ராஜன் 22 தவணைகளில் 3.82 லட்சத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல் மேலும் ராஜனிடம் பணம் கேட்டபோது, தான் ஏமாந்ததை உணர்ந்தார். மோசடி கும்பலை தொடர்பு கொள்ள முடியாததை அடுத்து சேலம் சைபர்கிரைமில் தொழிலாளி ராஜன் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட ஜெயவேரியாபானு, அர்ஷியாபானு, செர்ஷாகான், முகமது இம்ரான் மற்றும் திலீப்  ஆகியோர் சைபர் கிரைம் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 5 பேரிடம் விசாரணை மோசடி செய்வது குறித்து ஹரியானாவில் பயிற்சி பெற்றது தெரியவந்தது.

சிபிஐ என கூறி தமிழ்நாடு, கேரளாவில் பல கோடி மோசடி செய்த முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது..!

சிபிஐ என கூறி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மிரட்டி பல கோடி மோசடி செய்த சம்பவத்தில் முக்கிய நபரை எர்ணாகுளம் காவல்துறை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

சமீப காலமாக ஆன்லைன் மூலம் மோசடி நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாட்ஸ் அப் வீடியோ காலில் பலரை அழைத்து சிபிஐ அதிகாரி என்று கூறி மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். வீடியோ காலில் அழைத்து, அவர்களுக்கு வந்த ஒரு பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகவும், அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விர்ச்சுவல் கைது செய்துள்ளதாகவும் உடனடியாக தாங்கள் கூறும் பணத்தை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இவர்கள் மிரட்டி ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்து வருகின்றனர்.

கேரளாவில் திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இதுபோல கடந்த 3 மாதங்களில் மட்டும் 30 கோடிக்கு மேல் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. இந்நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் இந்தக் கும்பலிடம் சமீபத்தில் 30 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து ஏமாந்தார். இது தொடர்பாக எர்ணாகுளம் மத்திய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து எர்ணாகுளம் தனிப்படை காவல்துறை டெல்லி விரைந்து சென்று நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரின்ஸ் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்தான் முக்கிய நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து மோசடிக் கும்பலுக்கு கொடுத்து வந்தார்.

வங்கிகளில் பெருமளவு பணம் வைத்திருக்கும் நபர்களின் கணக்கு விவரங்களை சேகரித்து அந்தக் கும்பலுக்கு இவர் அனுப்பி வைப்பார். பெரும்பாலும் வயதானவர்களைத் தான் இந்தக் கும்பல் குறிவைக்கும். மோசடிக் கும்பலின் வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை இவர் கிரிப்டோ கரன்சியாக மாற்றி அந்தக் கும்பலுக்கு கொடுப்பார்.

இதன் மூலம் பிரின்ஸ் பிரகாஷுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்து வந்துள்ளது. இதுவரை இவருக்கு இந்த மோசடி மூலம் பல கோடி பணம் கிடைத்துள்ளது. இவர் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இதுபோல மோசடி நடத்தியுள்ளார் என காவல்துறை தெரிவிக்கின்றனர்.