எடப்பாடி பழனிசாமி, அவரது நிலத்தை அதிக பணம் கொடுத்து கேட்டால் கொடுப்பாரா…

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம், வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறை கைது செய்தனர்.

மேலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கலவரத்தை கலைத்தனர். இந்தச் சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த முற்றுகை போராட்டத்தின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “டெல்லியில் போய் போராடிய தமிழ்நாட்டு விவசாய சங்கங்கள் கடலூர் மக்களுக்காக களத்திற்கு இன்னும் வராதது ஏன்? கதிர் பிடித்திருக்கும் வயலை அழிப்பது வயிற்றில் உள்ள கருவை அழிப்பதற்கு சமம். கடலூர் மாவட்ட மக்களுக்கும், மண்ணுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்.எல்.சி.

என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக்கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்சனை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இது நமது உரிமைக்கான பிரச்சனை. 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை.

ஒரு பக்கம் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு, மறுபக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது. நிச்சயம் இதை விடமாட்டேன். திருச்சியில் வேளாண் சங்கமத்தை தொடங்கி வைத்து விட்டால் விவசாயிகளை, விவசாய நிலங்களை காப்பாற்றி விட முடியுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

என்.எல்.சி விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் எனக் கூறி இருந்தார். அதைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது விலையை கொஞ்சம் ஏற்றி என்.எல்.சி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் அவரைக் கேட்கிறேன்.. அவர் ஊரில் வைத்துள்ள 200 ஏக்கரை அரசு அதிக விலை கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?” என சரமாரியாக அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.