முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள புதுப்பாளையம் சாலையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் ஆவார். இவர் 15 பேருக்கு சத்துணவு திட்டத்துறையில் வேலை கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோரிடம் ரூ.76½ லட்சம் வழங்கியதாகவும், ஆனால் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை எனவும் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மீது நம்பிக்கை மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 26-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 29-ந் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 1-ந் தேதி அந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் 2-வது முறையாக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்பொழுது, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர்களின் நடவடிக்கை குறித்து நாமக்கல் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் சாலை பணியாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மழை கோட், கடப்பாரை, மண்வெட்டி போன்ற பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை ஆகவே அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

24 லட்சம்‌ மோசடி வழக்கில் அ.தி.மு.க. கிளை செயலாளர், தங்கையுடன்‌ கைது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியை சேர்ந்த கல்யாணி என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் அரசுப்பள்ளியில் நூலகர் பணிக்கு தேர்வானதால் ஊராட்சி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓடப்பள்ளியை சேர்ந்த தங்கராசுவின் சகோதரர் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பெற்று ஏமாற்றியதால் மனமுடைந்த தங்கராசு, கல்யாணியின் வீட்டின் முன்பு தீக்குளித்து பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது உறவினர் மதிவதனி ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தலா ரூ.12 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை பெற்றுக்கொண்டு, போலியாக பணி நியமன ஆணைகள் கல்யாணி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெகதீஸ்வரன் மற்றும் மதிவதனி ஆகியோர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் அம்பிகாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், கல்யாணி மற்றும் அவரது அண்ணன் செந்தில்குமார் ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

மேலும் சிலருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை போலியாக அச்சடித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்யாணி மற்றும் செந்தில்குமாரை காவல்துறை கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சூவிழிராஜாவிற்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளரிடம் மனு கொடுத்தார்.

சூவிழிராஜா மனு கொடுத்து ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் வருவாய் ஆய்வாளர் காலம் தாழ்த்தி வந்தால், இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் விசாரித்தார்.  அதற்கு வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே நிலத்தை உடனடியாக அளவீடு செய்து கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்க, லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்தனர்.

தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கோலாரம் ஊராட்சி வாவிபாளையத்தை சேர்ந்த தென்னரசு என்பவர் நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில் பி.எஸ்.டி. என்ற கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் உள்பட பல்வேறு அதிமுக ஆட்சியில் அரசு கட்டிடங்களின் கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதாக பி.எஸ்.டி. நிறுவனத்தின் மீது ஏற்கனவே புகார் எழுந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசு வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க. தலைமை செயலாளர் பி. தங்கமணி நாமக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் வருதராஜ் கொரோனாவால் இறந்தார், அதையொட்டி ஒன்றியக்குழு தலைவர் பதவி காலியானது. காலியான ஒன்றிய தலைவர் பதவி புதிய தலைவர் நியமனம் செய்ய மறைமுக தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தி.மு.க.வினரின் மிரட்டலுக்கு பயந்து கோவிலுக்கு சென்று விட்டனர். ஆனால் அவர்களை நான் கடத்தி சென்று விட்டதாக பொதுமக்கள் போர்வையில் கொடுக்கப்பட்ட மனுவில் என் மீது வழக்கு போட்டு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கேட்டேன். அவர், மனுவை பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.

நான் சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் நாமக்கல்லுக்கு வந்தேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி ஒன்றியக்குழு உறுப்பினர்களை கடத்தி இருக்க முடியும். எப்போது ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். என் மீது புகார் அளித்தவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்தார்.

ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் கலப்படம் குறித்து ஆய்வு

சென்னை உச்ச மன்றத்தில் நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாக மரவள்ளிக்கிழங்கு நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஆனால் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் பல சேகோ பேக்டரிகள், ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் பலவற்றைக் கலந்து தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இதை தடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. கடைகளில் விற்பனை செய்யப்படும் 3 வகையான ஜவ்வரிசியை நீதிபதி வாங்கி வந்திருந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜவ்வரிசி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று கூறினார். அதையடுத்து, தான் வாங்கி வந்த ஜவ்வரிசி பாக்கெட்டுகளை அரசு வக்கீல் மூலம், மன்றத்தில் ஆஜராகியிருந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் நீதிபதி வழங்கினார்.

தாபா ஓட்டலில் மது விற்பனை செய்த 2 பேர் கைது

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர், திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில் திருச்செங்கோட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்செங்கோடு- பரமத்திவேலூர் சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாபா ஓட்டல் உரிமையாளர் ராஜா என்பவரை காவல்துறை கைது செய்தது தாபா ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

பட்டுக்கூடு அங்காடியை சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து திமுக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில், பட்டுக்கூடு அங்காடியை இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார்.

விபத்தில் சிக்கியர்களுக்கு அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் உரிய சிகிச்சை வழங்க உத்தரவு

சுற்றுலா துறை அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் இன்று காலை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாமக்கல்லில் இருந்து இராசிபுரம் சென்று கொண்டிருந்தேன். அப்போது பொம்மைகுட்டைமேடு பகுதியை கடக்கும் பொழுது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.

உடனடியாக அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் விபத்து தொடர்பாக விசாரித்து, விபத்துகுள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சையை விரைந்து வழங்க உத்தரவிடடார்.