15 வயது சிறுமி சித்திரவதை கொடூர கொலை வழக்கில் 6 பேர் கைது..!

குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றிய 15 வயது சிறுமிக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்து உடலில் சிகரெட் காயங்கள் ஏற்படுத்தி கொடூரமான முறையில் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளனர்.

அமைந்தகரை பகுதியில் உள்ள மேத்தா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் முகமது நிஷாத் மற்றும் நசியா தம்பதி வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த 15 சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 2023- ஆம் ஆண்டு முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக வந்துள்ளார். கடந்த 1 வருடமாக அவர் அங்கே பணியாற்றி வந்துள்ளார்.

இந்த 1 வருடத்தில் கடந்த 4 மாதங்களாக அவர் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார், தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல், இரவு நேரத்தில் தூங்க கூட விடாமல் கடுமையாக வேலை வாங்கி கொடுமை செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் வீட்டில் மகனுக்கு வைத்திருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டதாக அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர்.

15 வயது சிறுமி கொலை குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை, அமைந்தகரை, மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் 01.11.2024 அன்று கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி இறந்து போனது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறை விசாரணையில் இறந்த போனவர் 15 வயது சிறுமி என்பதும் அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் என்பதும், சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் காவல்துறை விசாரணையில் இறந்து போன சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

எனவே மேற்கண்ட வீட்டில் வசித்த முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா (எ) நாசியா, நண்பர்களான லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் காவல்துறை விசாரணை செய்ததில் அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 31.10.2024 அன்று சிறுமியை தாக்கியதில் அவர் இறந்துள்ளது தெரிய வந்தது.

அதன் பேரில் மேற்கண்ட சந்தேக மரணம் வழக்கானது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு எதிரிகள் நிவேதா (எ) நாசியா, அவரது கணவர் முகமது நிஷாத், லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம் ஆகியோர் 02.11.2024 அன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர் என அந்த காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு..!

மகாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் பிரமுகர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. அதில், “பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ரஹிம், அனுஜ் தாப்பன் ஆகியோருடன் கொண்ட தொடர்பின் காரணமாகவே பாபா சித்திக் கொல்லப்பட்டார். எங்களுக்கும் சித்திக்குக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை.

சல்மான் கான் அல்லது தாவூத் குழுவுக்கு யாரெல்லாம் உதவுகிறார்களோ அவர்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். தயார் ஆகிக் கொள்ளுங்கள். எங்களின் சகோதரர்கள் கொல்லப்பட்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் எப்போதுமே முதலில் தாக்குவதிலை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1976 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த 66 வயதான பாபா சித்திக் மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பாபா சித்திக் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிலையில், நேற்று நிர்மல் நகரில் உள்ள அவரது மகனின் அலுவலகத்துக்கு வெளியில் இருந்த போது துப்பாக்கிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

30 துண்டுகளாக வெட்டி இளம்பெண் பிரிட்ஜில் அடைத்து வைத்த கொடூரம்..!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வயாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனேஷ்வரா பிளாக் 4-வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் வெளி மாநிலத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் அந்த மகாலட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், பெண்ணின் தாய் மற்றும் அக்கா ஆகிய இருவரும் அவரை பார்க்க வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் உடல் பல துண்டுகளாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பெங்களூருவில் மல்லேஸ்வரத்தை அடுத்த முனேஷ்வரா பிளாக்கில் ஜெயராம் என்பவரது வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருக்கும் அந்த பெண் 4-5 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், கொலையாளி அந்த பெண்ணுக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 30 க்கும் அதிகமான துண்டுகளாக வெட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். கொலையாளியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கபில் சிபல் கேள்வி: மாடு கடத்தியதாக நடந்த 12 -ஆம் வகுப்பு மாணவன் கொலை பற்றி பிரதமர் வாய் திறப்பாரா..!?

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி பசு கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் 12 -ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ரா பசு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 12 -ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ரா சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார். ஆனால் பசு காவலர்கள் காரை சுமார் 25 கிலோமீட்டர் துரத்திச் சென்று காரை சேதப்படுத்தியதுடன் ஆர்யன் மிஸ்ராவின் மார்பில் சுடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கின்றது. ஆர்யன் மிஸ்ரா மீட்டு உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

12 -ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ராவின் தந்தை சியானந்த் மிஸ்ரா ஆழ்ந்த துயரத்தில் மன வேதனை அடைந்துள்ளார். இதுபோன்ற வன்முறைக்கான மூல காரணத்தை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று விமர்சித்தார். பசு கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை சுட யார் உரிமை கொடுத்தது? அப்படிப்பட்ட உரிமையை மோடி அரசு கொடுத்திருந்தால் ஏன்? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கோபத்தில் தனது கேள்விகளை கேட்டார். மேலும் என் மகன் உயிரிழப்பிற்கு நீதி விசாரணை வேண்டியுள்ளார்.

இந்நிலையில், மாடு கடத்தியதாக தவறாக நினைத்து 12-ஆம் வகுப்பு மாணவனை பசு பாதுகாவலர்கள் கொலை செய்த விவகாரம் குறித்து துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாய் திறப்பார்களா?’ என கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

மாநிலங்களவை எம்பியான கபில் சிபல் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘நமக்கு இது அவமானம். ஆர்யன் மிஸ்ரா 12-ஆம் வகுப்பு மாணவன். அரியானாவில் அவன் மாடு கடத்தியதாக தவறுதலாக நினைத்து பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு காரணம், வெறுப்பை ஊக்குவித்ததுதான். இதைப் பற்றி பிரதமர், நமது துணை ஜனாதிபதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோர் பேசுவார்களா?’’ என கபில் சிபல் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெண் மருத்துவர் வன்கொடுமை, கொடூர கொலை..! ‘இயர்போன்’ மூலம் கொலையாளி கண்டுபிடிப்பு..!

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவக் கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.

இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கருத்தரங்கு கூடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. மருத்துவமனை வளாகத்தின் இதர பகுதி சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில் அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் கருத்தரங்கு கூடத்தில் நுழைந்துள்ளார். அப்போது அவர், ‘இயர்போனை’ காதில் மாட்டியிருந்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு அவர் வெளியேறி சென்றுள்ளார். அப்போது அவரது காதில் ‘இயர்போன்’ இல்லை. பெண் மருத்துவரின் உடல் அருகே ‘இயர்போன்’ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் சஞ்சய் ராயை கைது செய்துள்ளோம். மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் தன்னார்வலராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் சஞ்சய் ராய் பணியில் இருக்கும்போது இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. அவருக்கு 4 முறை திருமணமாகி உள்ளது. அவரது பாலியல் தொந்தரவை சமாளிக்க முடியாமல் அனைத்து மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர். பாலியல் வன்கொடுமையின்போது சஞ்சய் ராயிடம் இருந்து தப்பிக்க பெண் மருத்துவர் தீவிரமாக போராடி உள்ளார். குத்து சண்டை வீரரான சஞ்சய், பெண் மருத்துவரை மிக பலமாக தாக்கி இருக்கிறார். அவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பெண் மருத்துவர் கொலையில் நேர்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டேய் மாப்பிள எங்க காணோம் .. நான் செத்துட்ட மாப்பிள…. அப்பிடிய.. அவன் எங்க இருக்கானு பாரு

உலகெங்கும் நவீன தொழில் புரட்சியின் விளைவாக புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதீத வளர்ச்சியை எவ்வளவு சந்தித்திது இருக்கிறதோ அதே அளவிற்கு சமூதாய சீர்கேடுகளையும் மக்கள் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். சினிமாவை பார்த்துதான் மக்களின் மனநிலை சிதைக்கப்பட்டது என ஒரு சிலரின் கருத்துக்களாக இருந்து வரும் நிலைமாறி தொலைக்காட்சி சீரியல்களை பார்த்து மனிதாபிமானதை தொலைப்பது மட்டுமின்றி இன்று பலர் மனோதத்துவ மருத்துவர்களாகவே மாறிவிட்டனர்.

கொடிது கொடிது …அதனினும் கொடிது என்ற ஔவையார் வார்த்தையை சொல்லளவில் தான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகளை செயலளவில் பார்த்ததில்லை. நாம் இளைய தலைமுறையினர் அதை அனுபவித்து சீர்கெட்டு கொண்டு இருக்கின்றனர். மேலும் அதை சீர் செய்ய வேண்டிய நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி பழைய சித்தாந்தங்களை பேசிக் கொண்டிருக்கின்றோம்.

சினிமா, சீரியல் இதைவிட மிக அதிகமாக ஊடுருவியுள்ள சமூக வலைத்தளங்களில் நம்மை சீரழித்து கொண்டிருந்தாலும், இளைய தலைமுறையினர் அந்த சமூக வலைத்தளங்களில் சிக்கி ஒருபடி மேலேபோய் டேய் மாப்பிள எங்க காணோம் .. நான் செத்துட்ட மாப்பிள அப்பிடிய.. அவன் எங்க இருக்கானு பாரு நான் அவனை சுட்டுடுரேன் அத பாரு மேல மறைஞ்சிக்கிட்டு இருக்கிறான்… என்ன ஆச்சி மாப்பிள … என்னையும் சேர்த்து போட்டுடன் மாப்பிள…. என பித்து பிடித்தவர்களாக 5 வயதுலேயே உளறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

நாம் கடந்த காலங்களில் உறவுகளை சம்பாதிக்கவும், வெறுப்பை அறுவடை செய்யவும் நம் முன்னோர்கள் புறாவை தூது அனுப்பினர் அது பின்னாளில் உருமாறி மாட்டுவண்டியாக மாறியது. அதன்பின்னர் தபால்கள் மூலமாக உறவுகளை சம்பாதிக்க, தந்திகள் மூலம் துக்கத்தை பறிமாறினோம். ஆனால் எப்போது செல்போன் ஒவ்வொரு குடிமகன் கைகளில் வந்ததோ அப்போதே நாம் BP மாத்திரைகள் அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டோம்.

இந்த செல்போன் பயன்பாட்டால் முன்பின் தெரியாதவர்களின் மூலமாக நாம் BP ஏறி இன்று உயிரை மாய்த்து கொண்டுள்ளோம். செல்போன்களில் விழித்து செல்போனுடனே நாள் முழுவதும் சுற்றித்திரிந்து, உறங்கும் போதும் செல்போனுடனே உறங்குகின்ற கலாசாரம் நம்மில் பரவிக் கிடப்பது மிகுந்த வேதனை தருகிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு உலகம் பரந்து விரிந்து இருக்கிறது.

மேலும் இன்று உலகையே கொரோனா ஆட்டிப்படைக்கும் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் கைகளில் செல்போன்கள் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டுள்ளது. இதன் விளைவாக நமது சமுதாயம் சீர்கெட்டு போய் நாடெங்கும் திரும்பும் திசையெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் போன்ற கொடூர சம்பவங்கள் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும், கொலையானது கொசு அடிப்பதை போல, சாதாரண நிகழ்வாக மாறி போயிருக்கிறது.

சிறிது நாட்கள் வாழ்ந்தாலும், ராஜ வாழ்க்கை வாழ ஆசைப்படும் அவர்களின் மனதில் விஷ வித்தை உருவாக பல இடங்களில் பல விதமாக ஏமாற்றி கடன் வாங்கி கோடிக்கணக்கில் ஏமாற்றும் கும்பல், எந்த தொழிலையும் செய்யாமல், தங்களை தொழிலதிபர்களாக காட்டிக் கொள்ளும் கும்பல், மக்களுக்கு சேவை செய்வதாக கூறி உலகை ஏய்க்கும் மற்றொரு கும்பல் என திரும்பும் திசையெல்லாம் பல விதமான முகமூடிகளை அணிந்து கூட்டம் துாவி விட்டதன் விளைவுகளை சமுதாயம் இன்று அறுவடை செய்துக் கொண்டுள்ளது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை சில தனி மனிதர்களின் இழிகுணங்களாக இருந்த நிலை மாறி அதுவே சமூகத்தின் மனோபாவமாக மாறி இன்று நாட்டையே செல்லரித்து கொண்டுள்ளது. கடந்த கால நிகழ்வுகளை பார்த்து கொண்டே வாழும் மக்கள் யார் ஆண்டாலும், நம் நிலை மாறாது என்று விரக்தி நிலையில் இன்று வாழ்கின்றான். நம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் தன்னை தானே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.