நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த மன்சூர் அலிகான், “த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். மிஸ் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மன்சூர் அலிகான் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் பெரும்பாலானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ, அவரது எக்ஸ் தளத்தில், “இவர்கள் தாங்கள் செய்த தவறுகளை மறைக்க மற்றவர்களின் தவறுகளை உதாரணங்களாக காட்டி தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்கிறார்கள். மற்றவர்களை குறை சொல்லும் முன் முதலில் உங்களை நீங்களே எண்ணிப்பாருங்கள் மன்சூர் அலிகான். உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது.
இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும், அது முடியாது. மன்னிப்பு கேட்பதால் உங்கள் ஆண்மையின் அடையாளம் பறிபோகாது. மாறாக உங்கள் வீட்டு பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கும். நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை போலவே தனிப்பட்ட முறையில் இருந்திருக்கலாம். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம். இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பதிவிட்டிருந்தது.
இதனிடையே டிகர் மன்சூர் அலிகான் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அந்த பொண்ணு த்ரிஷா அவருடன் நான் நடிப்பதை வெறுக்கிறேன், அவருடன் நான் ஸ்கிரீன் ஷேர் செய்ய மாட்டேன் என கூறிவிட்டு, இப்போ பத்திரிகைகளில் த்ரிஷா போட்டோவையும் என் போட்டோவையும் பக்கத்துல பக்கத்துல போடுறாங்க.
எல்லா பேப்பரிலும் எங்கள் போட்டோக்களை பொண்ணு மாப்பிள்ளை மாதிரி போடுறாங்க. அந்த போட்டோவில் என் போட்டோவை நல்லதா தேடி எடுத்து போட்டிருக்கக் கூடாதாப்பா (நிருபர்களிடம் கேட்கிறார்)? ஆனால் சில படங்களில் அந்த அம்மாவை (த்ரிஷா)விட நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என் பெயர் ஹாலிவுட் வரை போய்விட்டது.
நடிகர் சங்கம் செய்தது இமாலய தவறு. எந்த விஷயமாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவிட்டுத்தான் அவர்களுடைய நடவடிக்கை குறித்து சொல்ல வேண்டும். சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன? நிஜமாகவா ரேப் செய்கிறார்கள்? சினிமாக்களில் ஹீரோக்களே கொலை செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் நிஜமாகவா கொல்கிறார்கள்?
சினிமாவில் ரேப் செய்யுறது என்றால் நிஜமாகவே ரேப் செய்யறதாய்யா (நடிகர் சங்கத்தினர்)? மீரா ஜாஸ்மின் அறிமுகமான படத்தில் ரேப் சீன் வந்தது. அப்போது அவரை கட்டிலில் போட்ட போது இடுப்பில் அடிபட்டு விட்டது. உடனே விலகிய துணியை மூடிவிட்டு, அம்மா அடிப்பட்டதுக்கு மன்னித்துவிடுங்கள் என கூறிவிட்டு அசிஸ்டென்ட்டை அழைத்து அவருக்கு முதலுதவி செய்ய சொன்னேன். இப்படித்தான் ரேப் சீன் இருக்கும்.
தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான், தமிழ்நாடே என் பக்கம் இருக்கு. இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படும் ஆள் நானில்லை. குஷ்பு அவர்களே நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்களுக்கு தெரியாதா, ஆந்திராவில் அன்னப்பூரணி ஸ்டூடியோவில் குரூப் டான்ஸராக என்னை பார்த்துள்ளீர்கள். யாரையாவது நான் மோசமாக பேசியுள்ளேனா? எஸ் வி சேகர் வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக பேசினாரே, அவரை போய் குஷ்பு கைது செய்ய வேண்டுமா இல்லையா?
நீட் தேர்வால் மருத்துவ கனவு கலைந்துவிட்டதால் மன முடைந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்தாரே! அப்போது என் தமிழகத்தில் மாநில பாடத்திட்டமே நன்றாகத்தானே இருக்கு ! ஏன் நீட் பாடத்திட்டம் என குஷ்பு கேட்க வேண்டுமா இல்லையா, மணிப்பூரில் பெண்களை பலாத்காரம் செய்து பிணத்தையும் விட்டு வைக்காமல் டயர் வைத்து எரித்த போது மகளிர் ஆணையம் மணிப்பூர் போனார்களா? என நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.