2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. பாட்னா, பெங்களூருவில் இதன் முதல் 2 கூட்டங்கள் நடந்த நிலையில், 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
இந்த 3-வது ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பிஹார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற சூழலிலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், பாஜகவை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், மக்களவை தேர்தலில், முடிந்தவரை தொகுதி பங்கீட்டுக்கான இடங்களை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பெற்று, ஒரே அணியாக போட்டியிடுவோம் என கூட்டணி தலைவர்கள் தீர்மானமாக அறிவித்து குறிப்பிடத்தக்கது.