Mamata Banerjee rally: பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை..! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை முழக்கம் …!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 9-ம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்து முதுகலை 2-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.

மம்தா பானர்ஜி ஆவேசம்: தேவைப்பட்டால் கொலையாளிகளை தூக்கில் போடுவேன்…!

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு அப்பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அப்பெண் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்துள்ளார்.

அவர் வியாழக்கிழமை இரவுப் பணியில் இருந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியின் கழுத்து எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனையின்போது அவரது தாய் உள்பட இரண்டு பெண்கள் உடனிருந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை. இனி இரவுப் பணிக்கு வரமாட்டோம் என்றும், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் மருத்துவம் பயின்று வரும் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனைக்கு ஊர்வலமாக வந்தனர். எமர்ஜென்சி பிரிவைத் தவிர மற்ற பிரிவு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மம்தா பானர்ஜி, இளநிலை மருத்துவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளேன். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான் மரண தண்டனைக்கு ஆதரவானவர் அல்ல. இருப்பினும் தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Mamata Banerjee: என்ன சாப்பிட வேண்டுமென பாஜக எப்படி முடிவு செய்யும்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினார். கோழி முட்டை, இறைச்சியை ஏன் சாப்பிட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்.

இட்லி, தோசை மற்றும் பிற மாநிலங்களின் உணவை நீங்கள் சாப்பிடக் கூடாது என நாங்கள் கூற முடியுமா? நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 80% பேர் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையில், பாஜக ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாமிச கடைகள் மூடப்படுவதாக கேள்விப்பட்டேன்.

நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்சி, ஒரு நபர் எப்படி முடிவு முடிவு செய்ய முடியும்? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

Mamata Banerjee இதற்குதான் 7 கட்டமாக தேர்தலா…”

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மால்டா மாவட்டத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது, “மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, தற்போதைய மக்களவைத் தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும். பா.ஜ.க.வின் ஆணையம் போல தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது. பா.ஜ.க.வின் தொண்டர்கள் போல மத்தியப் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியுமா?

பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காகவே 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகளை நசுக்கி, அதன் மூலம் தன்னை நிலைநாட்டுவதில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டுள்ளது. தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை பா.ஜ.க. பிளவுபடுத்துகிறது. பொது சிவில் சட்டத்தை அமலாக்குவது அக்கட்சியின் நோக்கம். இதன் மூலம் தங்களது சொந்த மதம், கலாச்சாரம், சடங்குகள் மீதான மக்களின் உரிமைகள் பறிபோகும்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Mamata Banerjee: பாஜக தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களை புலனாய்வு அமைப்புகள் சோதனை செய்வார்களா..!?

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான போட்டி வாய்ப்பை வழங்க மத்தியஅரசு மறுக்கிறது. குறிப்பாக, எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் ஹெலிகாப்டரில் பணம், தங்கம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை.

இதுபோன்ற செயலில் எங்கள் கட்சியினர் ஈடுபடமாட்டார்கள். பாஜகவினர்தான் அதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் வாகனங்களை சோதனையிடுவது போல, பாஜக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்வார்களா? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Mamata Banerjee: அம்பேத்கர் உருவாக்கிய நாட்டின் அரசியலமைப்பை நீங்கள் அழித்துவிட்டீர்கள்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், மேற்கு வங்காளத்தில் உள்ள 42 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை அனைத்து 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பேசுகையில், மக்களவை தேர்தலில் பாஜக 200 இடங்களைக் கூட வெல்லாது. மேற்குவங்கத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? பிரதமர் மோடியின் ‘உத்தரவாதங்களுக்கு’ இரையாகிவிடாதீர்கள். இவை தேர்தல் பொய் தவிர வேறில்லை. பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய நாட்டின் அரசியலமைப்பை நீங்கள் அழித்துவிட்டீர்கள் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மம்தா பானர்ஜி: “விஷப் பாம்பைக் கூட நம்பலாம்…! பாஜகவை நம்ப முடியாது…!”

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநிலத்தின் கூச் பெஹரில் வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு பேசினார். அப்போது, “பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மீண்டும் பெயரினை பதிவு செய்யுமாறு பாஜக கேட்கிறது. ஏன் இப்போது பெயரைப் பதிவு செய்யவேண்டும்? அவர்கள் அதிகமான பதிவுகளை விரும்புகிறார்கள். அப்போதுதான் அதனை நிறுத்த முடியும். நீங்கள் ஒரு விஷப் பாம்பைக் கூட நம்பலாம். அதனைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம். ஆனால், பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது. பாஜக நாட்டையே அழித்து வருகிறது.

மத்திய புலனாய்வு அமைப்புகள், என்ஐஏ, வருமான வரித் துறை, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்றவை பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், ஒரு சமமான களம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம். பாஜக ‘ஒரே நாடு ஒரே கட்சி’ என்ற கொள்கையை பாஜக பின்பற்றுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூச் பெஹரின் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் தேபாஷிஸ் தார் பாஜகவின் பிர்ஹும் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை கடுமையாக விமர்சித்தார். “தேபாஷிஸ் தார் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 5 பேர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்” என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

ஹேமந்த் சோரன் கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்: “ஜார்க்கண்ட்டின் உறுதி மிக்க மக்கள் நிச்சம் பதிலடிகொடுப்பார்கள்”

ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தார். இவர் மீது நில சுரங்க முறைகேடு புகார் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை நிராகரித்தார்.

அதன்பிறகு கடந்த மாதம் 20-ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் ராஞ்சியில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் 30 மணிநேரம் மாயமானார். இதையடுத்து மீண்டும் ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 7 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “சக்திவாய்ந்த ஒரு பழங்குடியினத் தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல், வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பைக் குறைக்கும் திட்டமிட்ட சதி.

ஹேமந்த் சோரன் எனது நெருங்கிய நண்பர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் அவர் பக்கம் உறுதியாக நிற்பேன் என்று நான் சபதம் செய்கிறேன். இந்த முக்கியமான போரில் ஜார்க்கண்ட்டின் உறுதி மிக்க மக்கள் நிச்சம் பதிலடிகொடுப்பார்கள், வெற்றி பெறுவார்கள்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி காட்டம்: “ராமர் கோயில் திறப்பு விழாவை வைத்து வித்தை காட்டுகிறது பாஜக”

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ல் நடைபெறவிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

அதே வேளையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்குச் செல்லப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதோடு, ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்க மம்தா பானர்ஜி முடிவு செய்திருப்பதாக அண்மையில் செய்திகள் பரவின. ஆனால் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், “யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் ஜனவரி 22 -ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், ராமர் கோயில் விஷயத்தில் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய்நகரில் ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். பாஜக நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பது கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி: மேற்கு வங்கத்தின் பெயரை கெடுப்பதே பாஜகவின் வேலை

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜிஎஸ்டி நிலுவை, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட டெல்லிக்கு செல்கிறார். அதற்கு முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல் தீவிரமான பிரச்னை. இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு தோல்வி. அதை மத்திய உள்துறை அமைச்சரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதைப் பற்றி அவர்கள் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது மேற்கு வங்கத்தை கேவலப்படுத்தும் பாஜவின் தந்திரம். மேற்கு வங்கத்தின் பெயரை கெடுப்பதே பாஜவின் வேலையாக இருக்கிறது. இது போன்ற எந்த சட்டவிரோத செயல்களையும் எங்கள் அரசு ஆதரிக்காது. டெல்லியில் வரும் 19-ம் தேதி நடக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.

அதைத் தொடர்ந்து 20-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்திற்கான நிலுவைத் தொகையை கோருவேன். அது மத்திய அரசின் பணம் மட்டுமல்ல. மேலும் சுகாதார மையங்களுக்கு காவி நிறம் பூச வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவு குறித்தும் பிரதமர் மோடியிடம் முறையிடுவேன் என மம்தா பானர்ஜி பேசினார்.